/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பு கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்
/
கரும்பு கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்
கரும்பு கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்
கரும்பு கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்
ADDED : ஜூலை 18, 2024 08:30 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, அரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் பயிரிடப்படும் கரும்புகளை, மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்புகின்றனர்.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் சர்க்கரைக்கு அரவை செய்கின்ற மொத்த கரும்புகளில், 40 சதவீதம் சீட்டணஞ்சேரி கரும்பு மண்டல விவசாயிகள் சாகுபடி செய்கின்ற கரும்புகளாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டு வந்த இப்பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், தற்போது நெல் உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, கரும்பு கொள்முதல் விலை குறைவாக இருப்பதே காரணம் என, விவசாயிகள் கூறி வருகின்றனர்.
தற்போது, படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 3,114 ரூபாய், 1,000 கிலோவிற்கு வழங்குகின்றனர். விவசாயிகள் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என கேட்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில தலைவரும் சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயியுமான தனபால் கூறியதாவது:
கரும்பு விலை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கரும்புக்கான விலை குறைவாக இருப்பதும், கரும்புகளை வெட்ட ஆட்கள் பற்றாக்குறை பிரச்னையும் தொடர்ந்து உள்ளது.
கரும்பு வெட்ட உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து கரும்பு வெட்ட ஆட்கள் கிடைத்தாலும், 1,000 கிலோவிற்கு 1,800 ரூபாய் வரை கூலி கேட்கின்றனர்.
இதனால், கரும்பு சாகுபடி மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் பெருந்தொகை கரும்பு வெட்டும் கூலிக்கே செலவிட வேண்டி உள்ளது. இதனால், நெல் உள்ளிட்ட மாற்று பயிர்களை சமீப காலமாக விவசாயிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
தற்போது, சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில் 630 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில், சாத்தணஞ்சேரியில் மட்டும் 300 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளடங்கும். கடந்த ஆண்டை கணக்கிடும்போது 30ல் இருந்து 40 சதவீதம் வரை இப்பகுதியில் கரும்பு சாகுபடி குறைந்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டில், சாத்தணஞ்சேரி பகுதியில் மட்டும் 900 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்தது குறிப்பிடத்தக்கது, இவ்வாறு அவர் கூறினார்.