/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமைச்சருக்கு குட்மானிங் சொன்ன ஏழைக்கு ஆன்-தி-ஸ்பாட் அரசு வேலை
/
அமைச்சருக்கு குட்மானிங் சொன்ன ஏழைக்கு ஆன்-தி-ஸ்பாட் அரசு வேலை
அமைச்சருக்கு குட்மானிங் சொன்ன ஏழைக்கு ஆன்-தி-ஸ்பாட் அரசு வேலை
அமைச்சருக்கு குட்மானிங் சொன்ன ஏழைக்கு ஆன்-தி-ஸ்பாட் அரசு வேலை
ADDED : ஜூலை 22, 2024 11:41 PM

சென்னை : சாலையோரத்தில் காகிதம் எடுத்து பிழைத்த நபருக்கு, சென்னை கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையில், மாதம் 12,000 சம்பளத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வேலை வழங்கி உள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை கிண்டியில் நேற்று மாலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, சாலையோரம் காகிதம் எடுத்து பிழைக்கும், திருச்சியை சேர்ந்த ராஜா, 38 என்பவர், அமைச்சரை அடையாளம் கண்டு வணக்கம் தெரிவித்தார்.
பதிலுக்கு அமைச்சரும் அவருக்கு வணக்கம் தெரிவித்து, அவரிடம்பேசினார்.
அப்போது, அவரது நிலையை கேட்டறிந்த அமைச்சர், தன் காரிலேயே வீட்டிற்கு அழைத்து சென்று, குளிக்க வைத்து, புதிய ஆடைகளை வாங்கி கொடுத்தார். தொடர்ந்து, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள உதவினார். அதே மருத்துவமனையில், மாதம் 12,000 ரூபாய் ஊதியத்தில் வேலையும் வழங்கி உள்ளார். அமைச்சரின் மனிதநேயமிக்க செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
வழக்கமான நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வணக்கம் தெரிவித்த நபரிடம்பேசினேன். அப்போது, தனக்கென யாரும் இல்லை என்றும், சாலையோரங்களில் காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து அதன் வாயிலாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். சின்னமலையில் உள்ள பழைய பொருட்கள் வாங்கும் கடையோரத்தில் தங்கியுள்ளதாக கூறினார்.
இதனால், என்னால் முடிந்த உதவியை அவருக்கு செய்தேன். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், உடல் ரீதியான பாதிப்புகளும் உள்ளது. எனவே, மருத்துவமனையிலேயே தங்கி துாய்மை பணி மேற்கொள்வதுடன், தொடர் சிகிச்சையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, அவரது வாழ்வாதாரம், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.