/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
30 கி.மீ., நீர்வரத்து கால்வாயில் 10 கி.மீ., துாரம் ஆக்கிரமிப்பு ஏரிக்கு தண்ணீர் வருவதும், வெளியேற்றுவதிலும் சிக்கல்
/
30 கி.மீ., நீர்வரத்து கால்வாயில் 10 கி.மீ., துாரம் ஆக்கிரமிப்பு ஏரிக்கு தண்ணீர் வருவதும், வெளியேற்றுவதிலும் சிக்கல்
30 கி.மீ., நீர்வரத்து கால்வாயில் 10 கி.மீ., துாரம் ஆக்கிரமிப்பு ஏரிக்கு தண்ணீர் வருவதும், வெளியேற்றுவதிலும் சிக்கல்
30 கி.மீ., நீர்வரத்து கால்வாயில் 10 கி.மீ., துாரம் ஆக்கிரமிப்பு ஏரிக்கு தண்ணீர் வருவதும், வெளியேற்றுவதிலும் சிக்கல்
ADDED : மே 22, 2025 12:59 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 கி.மீ., துார ஏரிநீர் வரத்து கால்வாயில், 10 கி.மீ., துாரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏரிக்கு தண்ணீர் வருவதிலும், விளை நிலத்தில் தேங்கியுள்ள நீரை அகற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், 381 ஏரிகள் நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலும், 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் என, மொத்தம் 761 ஏரிகள் உள்ளன.
நெற்பயிர்கள் சேதம்
இந்த ஏரிகளில், பருவ மழைக்கு நிரம்பும் தண்ணீரை பயன்படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும், 381 ஏரிகளுக்கு, 30 கி.மீ., துாரம் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் 40 கி.மீ., துாரம் பாசன கால்வாய்கள் உள்ளன.
ஏரி நீர்வரத்து கால்வாய்களை ஒட்டி இருக்கும், விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிலர், வண்டிப்பாதை, வைக்கோல் கட்டு போடுவது, பாசனத்திற்கு வெட்டி எடுப்பது என, பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளை செய்கின்றனர்.
குறிப்பாக, உத்திரமேரூர் தாலுகாவில், அத்தியூர் மேல் துாளி, அகரம் மேல் துாளி, சிலாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள். காஞ்சிபுரம் தாலுகாவில், கூரம், முசரவாக்கம், பெரியகரும்பூர், ஒழுக்கோல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள். வாலாஜாபாத் தாலுகாவில் தென்னேரி, தேவரியம்பாக்கம், உள்ளாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள். குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில் பல்வேறு ஏரிநீர் வரத்துக் கால்வாய்கள் என, 10 கி.மீ., துாரத்திற்கு ஆக்கிரமிப்பாளர்கள் பிடிகளில் சிக்கி தவித்து வருகிறது.
சிலாம்பாக்கம், கருவேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில், மழை நேரங்களில் விளை நிலங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, இந்த கால்வாய் பயன்பட்டு வந்தது. தற்போது, கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் உள்ளது.
இந்நிலையில், சிலாம்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால், கடந்த வாரம் 20 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நடவு செய்த நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அவ்வாறு தேங்கியுள்ள மழைநீரை மருதம் கால்வாயில் வெளியேற்ற முடியாத நிலை உள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரால் நெற்பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.
இதனால், கடைமடை விவசாயிகளுக்கு ஏரிநீர் பாசனம் பெறுவதிலும் மற்றும் பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதிலும் மற்றும் வயலில் தேங்கும் உபரி நீரை பாசன கால்வாய் வழியாக வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
அகற்ற நடவடிக்கை
இதுகுறித்து, உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
அத்தியூர் மேல்துளி ஏரி நீர்வரத்துக் கால்வாயையொட்டி சில விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
ஏரிநீரை நம்பி பயிரிடும் விவசாயிகளுக்கு அறுவடை நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, ஏரி நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், இரு மாதங்களுக்கு முன்பு வரையில், 80 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 15 ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து, வருவாய் துறையினர் படிவம் - -1 மற்றும் படிவம் - -2 கொடுத்தால், எங்கள் துறை சார்பில் படிவம் - -3 கொடுத்து ஆக்கிரமிப்பு அகற்ற தயாராக உள்ளோம். இதற்கு, வருவாய் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.