/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரே கல்லில் செய்த 200 டன் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை பழவேரி வருகை
/
ஒரே கல்லில் செய்த 200 டன் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை பழவேரி வருகை
ஒரே கல்லில் செய்த 200 டன் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை பழவேரி வருகை
ஒரே கல்லில் செய்த 200 டன் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை பழவேரி வருகை
ADDED : ஜூன் 22, 2025 02:18 AM

வாலாஜாபாத்,:வந்தவாசி அருகே ஒரே கல்லில் செய்யப்பட்ட 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை 80 கி.மீ., துாரம் பயணித்து நேற்று, பழவேரி சிற்ப கலைக்கூடத்திற்கு வந்தடைந்தது.
சென்னை தி.நகரில் பிரசித்தி பெற்ற அயோத்தி மடத்தில் ஆஞ்சநேயருக்கு பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை என்கிற கிராமத்தில் பெரிய பாறையை குடைந்து ஒரே கல்லில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை செய்யும் பணி, ஓராண்டாக நடைபெற்று வந்தது. 10 சிற்பிகள் உள்ளடங்கிய குழுவினர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 36 அடி உயரம், 12 அடி அகலம் கொண்ட இந்த சிலை சுமார் 200 டன் (2 லட்சம் கிலோ) எடை கொண்டதாக உள்ளது.
இந்த ஆஞ்சநேயர் சிலையை கடந்த 19ம் தேதி, கொரக்கோட்டை கிராமத்தில் 50 அடி ஆழம் பள்ளத்தில் இருந்து, ஊழியர்கள் பலரும் ஜாக்கி மற்றும் கட்டைகள் வைத்து மேலே துாக்கி, 158 டயர் கொண்ட ராட்சத கார்கோ வாகனத்தில் ஏற்றினர்.
பின், கொரக்கேட்டை கிராமத்தில் இருந்து, மூன்று நாட்களாக இரவு நேர பயணமாக தெள்ளார், வந்தவாசி, மருதநாடு, மேல்மருவத்துார், செங்கல்பட்டு சாலை வழியாக கார்கோ வாகனம் இயக்கப்பட்டது.
சாலை சந்திப்பு மற்றும் வளைவுகளில் கார்கோ வாகனம் திருப்புவதிலும், மின் ஒயர்கள் மீது படாமல் சிலையை எடுத்து செல்வதிலும் ஊழியர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தினர்.
திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்கள் வழியாக 80 கி.மீ., துாரம் பயணித்து இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம், திருமுக்கூடல் வழியாக நேற்று மாலை பழவேரி சிற்ப கலைக்கூடத்திற்கு வந்தடைந்தது.
அங்கு பக்தர்கள் தீபம் ஏற்றி பூஜை செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
இங்கு ஆஞ்சநேயர் சிலை முழுதுமாக வடிவமைக்கப்பட்ட பின், சென்னை தி.நகர் அயோத்தி மடத்திற்கு கொண்டு செல்லப்படும் என உடன் வந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.