/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது காய்கறி, பழம், பூ மார்க்கெட் 25 கடைகள் கட்டுவதற்கு பேரூராட்சி நிதி ஒதுக்கீடு
/
ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது காய்கறி, பழம், பூ மார்க்கெட் 25 கடைகள் கட்டுவதற்கு பேரூராட்சி நிதி ஒதுக்கீடு
ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது காய்கறி, பழம், பூ மார்க்கெட் 25 கடைகள் கட்டுவதற்கு பேரூராட்சி நிதி ஒதுக்கீடு
ஸ்ரீபெரும்புதுாரில் அமைகிறது காய்கறி, பழம், பூ மார்க்கெட் 25 கடைகள் கட்டுவதற்கு பேரூராட்சி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 26, 2024 12:29 AM
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் முதன்முறையாக காய்கறி, பழம், பூ மார்க்கெட் கட்டடம் கட்ட பேரூராட்சி நிதியின் கீழ், 2.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றம் அருகே 25 கடைகள் கட்ட பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், காய்கறி, பழம், பூ உள்ளிட்டவை விற்பனை செய்ய மார்க்கெட் போன்ற வணிக வளாகம் தற்போது வரை இல்லை. ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில், அரசு கிளை நுாலகம் எதிரே, பூ மார்க்கெட் இயங்கி வருகிறது.
ஏற்கனவே இந்த சாலையில், வாகன நெரிசல் இருப்பதால், சாலையோரம் இயங்கும் கடைகளால் அதிக மக்கள் கூட்டம் வருவதால், மேலும் நெரிசல் அதிகரித்து வருகிறது.
அதேபோல, ராமானுஜர் கோவிலுக்கு செல்லும் தெரு முழுதும் காய்கறி கடை இயங்கி வந்தது. 2017ல், ராமானுஜர் 1,000வது அவதார உற்சவம் நடந்தபோது, பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால், அங்கிருந்த காய்கறி, பழக் கடைகள் அகற்றப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் அந்த கடைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், ஏராளமான பேருந்துகள் அவ்வழியே செல்லும்போது நெரிசல் அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் காய்கறி விற்பனை செய்ய வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால், போதிய வசதியுடன் காய்கறி, பழம் விற்பனை செய்ய வளாகம் அமைக்க வியாபாரிகள் எதிர்பார்த்து வந்தனர்.
தொழிற்சாலைகள் பெருக்கம் மற்றும் வெளியூர்வாசிகளின் வருகையும் அதிகரித்துள்ளதால், இங்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் சாலை குறுகலாக இருப்பதால், பழம், காய்கறி கடைகளுக்கு தனி விற்பனை வளாகம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையோர காய்கறி, பழக்கடைகள் விற்பனை வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டால், சாலைகள் அகலமாக்கப்பட்டு வாகன நெரிசலை குறைக்க முடியும்.
புதிய காய்கறி மார்க்கெட் கட்ட, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் நிதியின் கீழ், 2.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அறிவுசார் மையம் மற்றும் நீதிமன்றம் அருகில் இந்த மார்க்கெட் வளாகம் அமைய உள்ளது.
டெண்டர் பணிகள் முடிந்தவுடன், மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து, டெண்டர் எடுத்தவருக்கு பணி ஆணை வழங்க வேண்டும். அதைத் தொடர்ந்து, 6 மாதங்களில் இந்த மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதுார் சுற்றியபகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், அனைத்து தரப்பு மக்களும் காய்கறி, பழம், பூ வாங்க ஸ்ரீபெரும்புதுாருக்கு தான் வர வேண்டும்.
அவர்களுக்கு மார்க்கெட் கட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்த விற்பனை வளாகம் அமைக்கப்படுகிறது. பேருந்து நிலையத்திற்குட்பட்ட சில இடங்களும் காலியாக உள்ளது. அவற்றையும் பயன்படுத்தி கடைகள் கட்ட திட்டமிட்டு உள்ளோம். இதனால், பேரூராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர்- -

