/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் அரசு கலை கல்லுாரி அமைக்க கோரிக்கை
/
காஞ்சியில் அரசு கலை கல்லுாரி அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2025 06:45 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மருத்துவ கல்லுாரிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், மருந்தியல் கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் பல வகையிலான கல்லுாரிகள் அரசு, தனியார் சார்பில் இயங்குகின்றன. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.
ஆனால், கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு படிப்பதற்கு, தனியார், அரசு கல்லுாரிகளே குறைவாக தான் உள்ளன. காஞ்சிபுரத்தில், நான்கு தனியார் கல்லுாரிகளும், இரண்டு அரசு உதவி பெறும் கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, உத்திரமேரூரில் ஒரு கலை அறிவியல் கல்லுாரியும், இரு ஆண்டுகளுக்கு முன்பாக குன்றத்துாரில் ஒரு அரசு கல்லுாரியும் அமைக்கப்பட்டன.
ஆனால், மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில், பல ஆண்டுகளாகவே அரசு கலை, அறியவில் கல்லுாரி அமைக்கப்படவில்லை என, மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியவில்லை எனவும், அரசு உதவி பெறும் கல்லுாரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் மாணவர்கள், உத்திரமேரூர் பகுதிக்கு, 30 கி.மீ., துாரம் பயணித்து அரசு கல்லுாரியில் படிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. காஞ்சிபுரத்திலேயே இலவசமாக பட்டபடிப்பு படிக்க, அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.