/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
க்யூ.ஆர்., குறியீடு வழியாக கோவில்களுக்கு நன்கொடை வசதி 'ஜிபே' மூலமாகவும் உண்டியலில் பணம் செலுத்தலாம்
/
க்யூ.ஆர்., குறியீடு வழியாக கோவில்களுக்கு நன்கொடை வசதி 'ஜிபே' மூலமாகவும் உண்டியலில் பணம் செலுத்தலாம்
க்யூ.ஆர்., குறியீடு வழியாக கோவில்களுக்கு நன்கொடை வசதி 'ஜிபே' மூலமாகவும் உண்டியலில் பணம் செலுத்தலாம்
க்யூ.ஆர்., குறியீடு வழியாக கோவில்களுக்கு நன்கொடை வசதி 'ஜிபே' மூலமாகவும் உண்டியலில் பணம் செலுத்தலாம்
ADDED : ஜன 16, 2024 11:16 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 160 கோவில்களுக்கு, க்யூ.ஆர்., குறியீடு வழியாக நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, 'ஜிபே' வாயிலாக உண்டியலில் பணம் செலுத்துவதற்கும், துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 1,430 கோவில்கள் உள்ளன.
இதில், பல கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள், வீட்டுமனைகள், வணிக கட்டடங்கள் என, பல வித சொத்துக்கள் உள்ளன.
இவற்றில், கிடைக்கும் வருவாயில், கோவிலுக்கு தேவையான வசதிகளை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மேம்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர, கோவிலுக்கு தேவையான கட்டடம், அன்னதானக் கூடம், அன்னதானக்கூட தளவாடப் பொருட்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டடங்களை நன்கொடையாளர்களின் பங்களிப்பிலும் கட்டிக்கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு வரையில், ஒரு தனி நபர் ஒருவர், கோவிலுக்கு நன்கொடை வழங்குவதற்கு, வங்கி வரைவோலை மற்றும் காசோலையாக வழங்கப்பட்டு வந்தன.
நடப்பாண்டு முதல், பிரதான கோவில்களில் க்யூ.ஆர்., குறியீடு வழியாக பணம் செலுத்தும் வசதியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், ஆதிபீட காமாட்சி கோவில், காமாட்சியம்மன் கோவில், கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில்களில், க்யூ.ஆர்., குறியீடு வழியாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், திருவிடைந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் என, பல்வேறு கோவில்களில், க்யூ.ஆர்., குறியீடு வழியாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு நன்கொடை செலுத்தும் நன்கொடையாளர்கள் யாரும் ரசீது பெற காத்திருக்க தேவையில்லை. இந்த க்யூ.ஆர்., குறியீடு வசதி வழியாக பணம் செலுத்தலாம்.
இதற்கு வருமான வரி விலக்கு உண்டு என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மண்டல ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் இணை ஆணையரின் கட்டுப்பாட்டில், 225 பிரதான கோவில்கள் உள்ளன. இதில், 160 கோவில்களில், க்யூ.ஆர்., குறியீடு வழியாக நன்கொடையாளர் ஒருவர் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து கோவில்களில் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டு உள்ளன.
இது, தவிர கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பணம் எடுத்து செல்ல மறந்துவிட்டாலும், 'ஜிபே' வழியாக உண்டியலில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில், அனைத்து தரப்பினரும் பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

