/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
ADDED : ஜன 26, 2024 01:28 AM

தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். இவ்விழா நாளான நேற்று, காஞ்சி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, முருகப் பெருமானை தரிசித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், வள்ளிதேவிக்கு பச்சை குங்கும அலங்காரம், தெய்வானைக்கு சிவப்பு குங்கும அலங்காரத்திலும், உற்சவருக்கு 'ஓம்' எனும் பிரணவ மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.
15,000 லட்டுகள் பிரசாதம்
பக்தர்கள் 10,000த்திற்கும் மேற்பட்டோர், முருகப்பெருமானை வழிபட்டனர்.
●குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,தைப்பூச விழாவை ஒட்டி, நேற்று காலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் நிர்வாகம் சார்பில், 15,000 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
●காஞ்சிபுரத்தில், 13 அடி உயரமுள்ள பத்துமலை முருக பெருமானுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது.
●சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், வி.என்.பெருமாள் தெருவில், 22வது ஆண்டு தைப்பூச அன்னதான பூஜை நேற்று காலை 11:45 மணிக்கு தீபஜோதி தரிசனம் நடந்தது.
●காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சேலை ராமசாமி தெருவில் உள்ள ராமலிங்க அடிகளார் சன்மார்க்க சபையில், நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.
காஞ்சிபுரம் நெமந்தகார தெருவில் உள்ள, பழநி ஆண்டவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், காஞ்சிபுரம் முத்தீஸ்வர் கோவிலில், திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி - திருஅருட்பா அகவல் பாராயணம், காலை 9:00 மணி முதல், மாலை 3:00 வரை நடந்தது.
வடபழனி
●தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது.
தொடர்ந்து, மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வந்த 5,000 குடம் பால், பெரிய பாத்திரத்தில் சேகரிப்பட்டு, 'ஸ்டீல்' குழாய் வழியாக அர்த்த மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
நேற்று அதிகாலை 5:30 மணி முதல் இரவு, 10:00 மணிவரை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர்.
கந்தகோட்டம்
பிராட்வே அடுத்த பூங்கா நகர் கந்தகோட்டம் கந்தசுவாமி கோவிலில் மூலவர் கந்தசுவாமி, உற்வசர் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.
திருத்தணி
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தனக்காப்பு, தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பாரிமுனை கச்சாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ பெருமான், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றில், தெப்ப உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
●திருப்போரூர் கந்த சுவாமி கோவில், பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன், திருவான்மியூர் பாம்பன்சுவாமிகள் உட்பட பல கோவில்களில் தங்க ரதம், வெள்ளி ரதங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது.
- -நமது நிருபர்- -

