/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு மருத்துவமனை கட்டுமான பணி நிறைவு
/
குளித்தலை அரசு மருத்துவமனை கட்டுமான பணி நிறைவு
ADDED : செப் 19, 2025 01:38 AM
குளித்தலை ''குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2023ம் ஆண்டு, 19 மாவட்டங்களில் புதிதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளையும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக, 6 மருத்துவமனைகளும் என மொத்தம், 25 மருத்துவமனைகள், 1,018 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில், விரைவில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இங்கு அவசர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, தொற்றா நோய் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, கண் பாதுகாக்கும் பிரிவு, எலும்பு, நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக செயல்படும். தற்போது, 12 டாக்டர்கள், 36 செவிலியர்கள் பணியில் உள்ளனர். ஆனால், 300 படுக்கை வசதிகளுக்கேற்ப டாக்டர்கள், செவிலியர்கள், பிற பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
இம்மருத்துவமனை ஒருங்கிணைந்த தாய்சேய் நல மையமாக செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும், 150
பிரசவங்கள் நடக்கின்றன. இந்த மருத்துவமனை, தேசிய தரச்சான்றிதழ் மற்றும் லக்சயா சான்றிதழ்களை பெற்ற முதல் மருத்துவமனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, கலெக்டர் தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செழியன், குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, நகராட்சி கமிஷனர் நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.