ADDED : ஜன 17, 2024 11:31 AM
பயணிகள் நிழற்கூடம்
கட்ட வேண்டும்கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக  நுழைவு வாயிலில்,
கரூர் நகருக்கு செல்லும் பகுதியில், பயணிகள் நிழற்கூடம்
அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளியணை சாலையில்
நிழற்கூடம் இல்லை. பழைய நிழற்கூடம் சேதமடைந்த நிலையில்
உள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிப்படுகின்றனர். வெள்ளியணை சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
சாலைகளை பராமரிக்க
நடவடிக்கை தேவை
கரூர் கவுரிபுரம் பகுதியில், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள, தார்ச்சாலை பல மாதங்களாக  குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. மேலும், கரூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, இரு சக்கர வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள், வேலைக்கு செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி பொதுமக்கள் காயம் அடைகின்றனர். எனவே, கவுரிபுரம் பகுதியில் உள்ள, குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
பிள்ளபாளையம் சாலை அருகில்
குழாய் விரிசலால் வீணாகும் நீர்
பிள்ளபாளையம் சாலையில், காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணானது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, கிராமங்களுக்கு காவிரி நீர் குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் பிள்ளபாளையம் பாலம் மற்றும் கடைவீதி அருகில் என, இரு இடங்களில் குழாய்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் விரிசல் காரணமாக தினமும் காவிரி நீர் வீணாகிறது. மேலும் வீணாகும் குடிநீர் சாலையோரம் பள்ளங்களில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாய் விரிசல் சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

