ADDED : பிப் 02, 2024 10:30 AM
ஓசூர்: சூளகிரி நகருக்குள் நேற்று அதிகாலை ஒற்றை யானை நுழைந்தது. சூளகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் அருகே வந்த இந்த யானை, அப்பகுதியில் நிறுத்தியிருந்த ஆம்புலன்சுகளை சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்த அவசர சிகிச்சை மைய ஊழியர் நடராஜ் என்பவரையும் தாக்க முற்பட்டது. தொடர்ந்து துரைஏரி பக்கமாக சென்றது. வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சூளகிரி நகருக்குள் யானை வந்த சம்பவம், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சூளகிரி அருகே கோட்டங்கிரி என்ற இடத்தில், தோட்டத்தில் மாட்டை கட்டிப்போட வந்த ராமண்ணா, 65, என்பவரை ஒன்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதேபோல், சூளகிரி அடுத்த அட்டகுறுக்கி பகுதியில் நுழைந்த, 3 யானைகள், ஜெய்சங்கர் என்பவரின் மாட்டை தந்தத்தால் குத்திக் கொன்றது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

