ADDED : ஜூன் 08, 2024 02:37 AM
வேட்டை கும்பல் துப்பாக்கியால்
சுட்டதில் வாலிபர் சாவு?
அரூர்: அரூர் அருகே வேட்டை கும்பல் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில், தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் உயிரிழந்ததாக புகார்
எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி பகுதியில், கடந்த, 5ல் இரவு அங்குள்ள வனப்பகுதிக்கு மான் வேட்டைக்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது, கள்ள
நாட்டுத்துப்பாக்கி மூலம் மானை சுட்டபோது தவறுதலாக வேட்டைக்கு சென்ற வாலிபர் மீது குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் அடக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்ட போது, ''அது போன்ற தகவல் எதுவும் வரவில்லை; தொடர்ந்து விசாரிக்கிறேன்,'' என்றார். கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் கோட்டப்பட்டி பகுதியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வயல் விழா மற்றும்
வேளாண் கண்காட்சி
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாரத்தில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் அத்திப்பாடி கிராமத்தில் வயல் விழா மற்றும் வேளாண் கண்காட்சி நடந்தது.
வேளாண் துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் மற்றும் ஓருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா இயற்கை விவசாயம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், ஒருகிராமம் ஒரு பயிர் திட்டம் குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, பையூர் வேளாண் விஞ்ஞானி இணைபேராசிரியர் திலகம் விதை தேர்வு செய்தல், விதைப்பு, பருவம், பாரம்பரிய இரகங்களை சரியான பருவத்தில் நடவு செய்தல்,கோடை உழவு செய்தல், பயிர்சாகுபடியில் ஓருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, இயற்கை எருக்களை பயன்படுத்துதலின் நன்மை குறித்தும் பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும் என அறிவுரை கூறினார். வேளாண் கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர்.