sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 11, 2024 11:13 AM

Google News

ADDED : ஜன 11, 2024 11:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோழிக்கடையில் பணம் திருட்டு

மொரப்பூர் அடுத்த எலவடையை சேர்ந்தவர் சக்திவேல், 37; இவர், மொரப்பூரில் கல்லாவி சாலையில் கோழிக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 30 இரவு, 9:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சக்திவேல் வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள் அதிகாலை, 5:00 மணிக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த, 7,000 ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. அருகில் இருந்த மெடிக்கல் மற்றும் கிருஷ்ணன் என்பவரது ஜெராக்ஸ் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. புகார்படி, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொதுமக்கள் குறைதீர் முகாம்தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த புதிய மனுக்கள் மீதான குறை தீர்க்கும் முகாம் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடக்கிறது.

நேற்று தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் குறைதீர் முகாம் நடந்தது. 81 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்தும் பிரச்னைகளையும் தீர்த்து வைத்தார். ஏ.டி.எஸ்.பி., இளங்கோவன், பாலசுப்ரமணியம், டி.எஸ்.பி., ராமசந்திரன், நாகலிங்கம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு

அரூரில் செயல்படும் ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமானதாகவும், சரியான எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து, ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் புகார் தெரிவிக்காத வகையில், விரைவாக பரிசு தொகுப்பு பொருட்களை வழங்க விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார். வட்ட வழங்கல் அலுவலர் பழனிசாமி உடனிருந்தார்.

மின் தடையை சரி செய்ய கோரி மனுஅரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,ல், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த கேபிள் ஒயர்களை சரி செய்யக்கோரி, சிட்லிங் பஞ்., துணைத் தலைவர் வேலாயும் மற்றும் பொதுமக்கள் அரூர் மின்வாரிய செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகளுக்கு பயிற்சிதர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டியில் வேளாண்மை உதவி இயக்குனர் தேன்மொழி ஆலோசனைப்படி, அட்மா திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த கால்நடைகள் பண்ணையம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

வேளாண்மை அலுவலர் இளங்கோவன் துவக்கி வைத்து, மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொப்பூர் கால்நடை உதவி மருத்துவர் வாசுதேவி, ஒருங்கிணைந்த கால்நடைகள் பண்ணையம் அமைப்பது குறித்து பேசினார். பாளையம் கால்நடை மருத்துவர் ஞானசேகரன், கால்நடைகளை பராமரிக்கும் முறைகள், தாது உப்புகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவசங்கரி நன்றி கூறினார்.

இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்அரூரில், இந்திய கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய செயலர் சிற்றரசு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் தமிழ்க்குமரன் பேசினார். இதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களையும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

மாநில அரசு கோரியுள்ள, 21 ஆயிரத்து, 692 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முருகன், பரமசிவம், அல்லிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.5.40 லட்சத்தில் நிழற்கூடம்

பூமி பூஜையுடன் துவக்கம்

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வீராசனுார் கிராமத்தில் நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த இடத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணியை நேற்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் சாந்தி தலைமை வகித்தார். 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 5 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி துவங்கப்பட்டுள்ளது. மகேந்திரமங்கலம் முன்னாள் பஞ்., தலைவர் கோவிந்தராஜ், ஜக்கசமுத்திரம் பஞ்., தலைவர் முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் முனிராஜ், காரிமங்கலம் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மக்கள் தொடர்பு முகாமில்

நலத்திட்ட உதவி வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டாங்குறிச்சியில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 22 பேருக்கு, 4.87 லட்சம் ரூபாய் அரசு உதவி, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், 257 பேருக்கு, 1.39 கோடி ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, தோட்டக்கலை துறை மூலம், மூன்று விவசாயிகளுக்கு, 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பழச்செடி தொகுப்புகள் உள்ளிட்ட

உதவித்தொகை வழங்கப்பட்டன. வேளாண் துறை சார்பில்,11 விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 507 -மதிப்பில் கதிரடிக்கும் இயந்திரம், தார்பாலின் தென்னங்கன்று என மொத்தம், 321 பேருக்கு, 1.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா, தாசில்தார் வள்ளி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.2.25 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம், புழுதியூர் வாரச்சந்தைக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று, அதிகாலை, 5:00 மணி முதலே, 1,400க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சேலம், ராசிபுரம், தர்மபுரி, பொம்மிடி, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,800 முதல், 7,500 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 500 முதல், 700 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனையானது.

மேலும் கலப்பின, ஜெர்சி வகையை சேர்ந்த, 280 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 45 ஆயிரம் முதல், 73 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வளர்ப்பு மாட்டு கன்று ஒன்று, 9,000 முதல், 32 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.

நேற்று நடந்த சந்தையில் ஆடுகள், ஒரு கோடியே, 50 லட்சம், மாடுகள், 75 லட்சம் என, மொத்தம், 2.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், மாடுகளுக்கு கட்டப்படும் வண்ண கயிறுகள், மணிகள், வண்ணப்பொடிகள், அலங்கார பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

கோவிலை சுத்தம்

செய்யும் பணி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பாகலுார் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமிப்பு செய்திருந்தன. இதனால் பக்தர்கள் கவலையடைந்தனர். இதையடுத்து, இந்து தர்ம சேவா சங்கத்தினர், கோவிலை ஆக்கிரமித்திருந்த செடி, கொடிகளை அகற்றியதுடன், சுவாமி சிலைகளை சுத்தம் செய்தனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மினி பஸ் -பைக்மோதலில் வாலிபர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் இருந்து கர்நாடக மாநிலத்தை நோக்கி மினி பஸ் ஒன்று நேற்று மதியம் சென்றுள்ளது. அப்போது, நேரலகரி அடுத்த சிகரலப்பள்ளி அருகே சென்றபோது, எதிரில் வந்த பல்சர் பைக்குடன் மோதியது. இதில் டூவீலரில் வந்த கர்நாடக மாநிலம், கனுமனப்பள்ளியை சேர்ந்த ரமேஷ்ராவ், 24, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

பாம்பு கடித்து பெண் பலிவேப்பனஹள்ளி அடுத்த குட்டப்பள்ளியை சேர்ந்தவர் புஷ்பா பாய், 40. இவர் நேற்று முன்தினம் தன் வீட்டருகே, விறகு சேகரிக்க சென்றபோது அவரை பாம்பு கடித்துள்ளது. மயங்கி கிடந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாடு முட்டி துாய்மை பணியாளர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை தாலுகா, ஒன்னுகுறுக்கை பகுதியை சேர்ந்தவர் முத்தப்பா மனைவி சிவம்மா, 50. கெலமங்கலம் டவுன் பஞ்.,ல், தற்காலிக துாய்மை பணியாளராக உள்ளார்; நேற்று காலை சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெருவில், குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கோவிலுக்கு சொந்தமான காளை மாடு, சிவம்மாவை கொம்பால் குத்தி துாக்கி வீசியது. இதில் குடல் சரிந்து படுகாயமடைந்த அவரை மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ராதா ருக்மணி கோவிலில்

மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய கணக்கம்பட்டி கிராமத்தில் உள்ள, ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெற்று, நேற்று நிறைவு விழா கணபதி ேஹாமத்துடன் தொடங்கி சுவாமிகளுக்கு புனித நீருடன் அபிஷேக ஆராதனை நடந்தது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை யாதவ இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு

வழங்கும் பணி துவக்கம்

ஓசூரில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 7 வது வார்டுக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில், மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய், இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினர். மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கமிஷனர் சினேகா, சப்கலெக்டர் பிரியங்கா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தனி தாசில்தார் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல், ஓசூர் ஒன்றியம், முதுகானப்பள்ளி கிராமத்தில், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவற்றை நேற்று மாலை வழங்கினார்.

கி.கிரியில் ஹனுமந்த் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய ஸமேத ராகவேந்திர ஸ்வாமிகள் ம்ருத்திகா ப்ருந்தாவன கோவிலில், ஸ்ரீமத் ஹனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு நிர்மால்யம், 7:00 மணிக்கு சீதா, ராமர், ஹனுமருக்கு சிறப்பு அபிேஷகம், காலை, 9:00 மணிக்கு ஸ்ரீபவமான ஹோமம் நடந்தது.

பகல், 11:30 மணிக்கு சீதா, ராமர், ஹனுமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்களாரத்தி நடந்தது. 12:00 மணிக்கு தீர்த்தப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி செந்தில்நகர் உடுப்பி கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரா ஸ்வாமிகள் கோவிலில், ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று காலை, நிர்மால்யம், ஹரி வாயுஸ்துதி பாராயணம், சிறப்பு அபிேஷகம், மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவையும், மாலை, 6:00 மணிக்கு பஜனையும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளி கிராமத்தில், ஹனுமந்த் ஜெயந்தி விழா மற்றும் பக்த ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா நேற்று காலை, 9:00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இரவு, 7:00 மணிக்கு வேதபாராயணம், கங்காபூஜை, கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை, பக்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்தல் நடந்தது.

டூவீலர் கவிழ்ந்து விபத்து

6 வயது சிறுமி பலி

வேப்பனப்பள்ளி அடுத்த, கொத்தகிருஷ்ணப்பள்ளி கோழிப்பண்ணையில் வடமாநிலத்தை சேர்ந்த லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கி வேலை செய்துள்ளனர். நேற்று முன்தினம் லோகேஷ், தன் குடும்பத்தினருடன் டூவீலரில் வேப்பனஹள்ளி அருகே சென்றபோது, டூவீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது, 6 வயது மகள் சொர்ணா சம்பவ இடத்திலேயே இறந்தார். லோகேஷ் படுகாயமடைந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

பொங்கல் விழா கொண்டாட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம், உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 67 மாணவர்கள், 38 மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பொங்கலை வரவேற்றனர். உதவி திட்ட அலுவலர்கள் வடிவேல், சண்முகசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரஸ்வதி, சர்தார், கணேசன், அருண்ஜோதி, மகேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேட்டு, தொண்டு நிறுவனர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மூச்சுத்திணறி இறந்த குழந்தைதாய்ப்பால் குடித்தபோது சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லுார் அடுத்த மேலபந்தையை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன், 34. இவரது மனைவி ராஜேஸ்வரி, 31. இவருக்கு, 2 வயதில் மகன் உள்ள நிலையில், 51 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, பெண் குழந்தை அழுதது. ராஜேஸ்வரி, குழந்தைக்கு பால் கொடுத்தார்.

அப்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராஜேஸ்வரி, உடனே குழந்தையை, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெரணமல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேற்கூரை அமைக்க பூமி பூஜைகடத்துார் பஸ் ஸ்டாண்டில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக மேற்கூரை அமைக்கும் பணியை, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., ஆ.கோவிந்தசாமி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். ஒன்றிய செயலாளர்கள், மதிவாணன், முருகன், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடிநீர் நிலையம் கட்ட பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், கிருஷ்ணகிரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க, 9.85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், இளைஞர் காங்., மேற்கு மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர், பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். கவுன்சிலர்கள் சபீர், ஜெயந்த், சஞ்சனாபாலாஜி

உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில விளையாட்டு போட்டி

விளையாட்டரங்கில் துவக்கம்

தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்த, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.

சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜிம்னாஸ்டிக், வளைபந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்துார் உள்ளிட்ட, 35 மாவட்டங்களை சேர்ந்த, 2,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பென்னாகரம் பா.ம.க., எம்.எல்.ஏ., மணி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

அங்கன்வாடி மையம் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 14 வது வார்டுக்கு உட்பட்ட சுண்ணாம்பு ஜிபி பகுதியில், 45 ஆண்டு பழமையான அங்கன்வாடி மையம் இருந்தது. கட்டடம் மிகவும் சிதிலமடைந்து மோசமாக இருந்ததால் இடிக்கப்பட்டது.

அதே இடத்தில், டைட்டான் நிறுவனம் மற்றும் ஓசூர் மாநகராட்சி இணைந்து, நமக்கு நாமே திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.

மாவட்ட கலெக்டர் சரயு, மேயர் சத்யா ஆகியோர் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர். 32 குழந்தைகளுக்கு ஸ்வெட்டர், ஸ்கூல் பேக் வழங்கப்பட்டன. அங்கன்வாடி மையத்திற்குள், ரத்தன் டாடா புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை, மாவட்ட கலெக்டர் சரயு, மேயர் சத்யா திறந்து வைத்தனர். மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், கமிஷனர் சினேகா, சப்கலெக்டர் பிரியங்கா, தி.மு.க., வார்டு செயலாளர் சேகர், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

பால் வியாபாரி கொலை

வழக்கில் வாலிபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலுார் அருகே எழுவப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 44, பால் வியாபாரி; கடந்த, 6 இரவு ஊருக்கு செல்லும் வழியில், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி, இரும்பு ராடால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த முனிராஜின் தந்தை கோபாலப்பா மீது இருந்த முன்விரோதம் காரணமாக, அவரது மகன் முனிராஜ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை கொலை செய்ததாக, எழுவப்பள்ளியை சேர்ந்த மது, 31, என்பவரை பாகலுார் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

ரூ.29.10 லட்சத்தில் நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கோலட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து, 266 மனுக்களை பெற்று, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து பல்வேறு அரசு துறைகள் சார்பில், 98 பயனாளிகளுக்கு, 29.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் வழங்கினர்.

ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

'பா.ஜ., - தி.மு.க., கள்ள உறவு'

முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கள்ள உறவு வைத்துள்ளதாக பேசினர். தற்போது உதயநிதி, பிரதமரை

சந்தித்து பேசுகிறார். அவர்கள் தான் தற்போது கள்ள உறவில் உள்ளனர்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேசினார்.

கிருஷ்ணகிரியில், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மாணவர்கள், தி.மு.க., மகளிரணியில் இருந்தவர்கள், ஆட்டோ டிரைவர்கள் என, 200 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர செயலர் கேசவன் தலைமை வகித்தார். அதில், துணை பொதுச்செயலர் முனுசாமி முன்னிலையில், அனைவரும், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

தொடர்ந்து முனுசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், 'பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கள்ள உறவு வைத்துள்ளது' என பேசினர். தற்போது உதயநிதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

அவர்கள் தான் தற்போது கள்ள உறவில் உள்ளனர். ஊழல், தி.மு.க., அமைச்சர்களை காப்பாற்ற, அவர்களிடம் அடிமையாகவும், பேரம் பேசியும் வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us