ADDED : ஜன 17, 2024 11:39 AM
திருப்பதிக்கு பக்தர்கள் நடைபயணம்
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம், வீராணம், மின்னாம்பள்ளி, தாரமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று, அரூர் வழியாக, திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்கிறோம். வரும், 22ல் திருப்பதிக்கு சென்றடைந்து சுவாமியை தரிசிக்க உள்ளோம். கடந்த, 46 ஆண்டுகளாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறோம்' என்றனர்.
கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
மகேந்திரமங்கலம் அடுத்த ஊமையன்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரன், 32; கடந்த, 15ல் தனித்தனி பைக்குகளில் நண்பர்களுடன் சென்றார். குமரன் தன் யமஹா கிராக்ஸ் பைக்கில் வீட்டிலிருந்து மாரண்டஹள்ளி சென்றார். அவருக்கு முன்னால் சென்றவர்கள் அவர் தொடர்ந்து வராததை கவனித்து தேடினர். அப்போது குமரனின் பைக் மட்டும் வெள்ளிசந்தை - மாரண்டஹள்ளி ரோட்டில் வெலாம்பட்டி கரும்புத் தோட்டத்தில் இருந்துள்ளது. நண்பர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது, கரும்பு தோட்டத்தின் அருகே, பரசுராமன் என்பவரது விவசாய கிணற்றில், குமரன் சடலத்தை கண்டுபிடித்தனர். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி வாலிபர் உயிரிழப்புமாரண்டஹள்ளி அடுத்த எம்.செட்டிஹள்ளியை சேர்ந்தவர் அறிவழகன், 24; நேற்று முன்தினம் அவருடைய யமஹா எம்.டி., பைக்கை இ.பி., காலனியை சேர்ந்த ரூபன், 25 என்பவர் ஓட்டி சென்றபோது, அறிவழகன் பின்னால் அமர்ந்து சென்றார்.
மாரண்டஹள்ளி அருகே சென்றபோது, எதிரே தேன்கனிகோட்டை நோக்கிச் சென்ற மாருதி சுசுகி ஆல்டோ கார், அவர்களின் பைக் மீது மோதியது. இதில், அறிவழகன் மற்றும் ரூபனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு மாரண்டஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அறிவழகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ரூபன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்இண்டூரை சேர்ந்த, 18 வயது மாணவி, பாலக்கோடு அரசு கலைக் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 13ம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு பஸ் மோதி விவசாயி சாவுநல்லம்பள்ளி அடுத்த தொம்பரகாம்பட்டியை சேர்ந்த விவசாயி சக்திவேல், 50; கடந்த, 15ம் தேதியன்று அதிகாலை, 2:30 மணிக்கு பொங்கல் பண்டிகைக்கு மகளை அழைத்து வர சென்றார். அப்போது, பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த, அரசு பஸ் சக்திவேல் மீது மோதியது. இதில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தி.மு.க., சமத்துவ பொங்கல் விழா
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
நடந்தது.
இதில், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். முன்னதாக நல்லம்பள்ளி பட்டாளம்மன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, படையலிட்டு அப்பகுதியில் இருந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பொங்கல் மற்றும் செங்கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், தொண்டரணி பழனிசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தமிழன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தீர்த்தராமன், சவுளூர் தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடுதலான ஆதார் மையம்
அரூரில் திறக்க கோரிக்கை
அரூர் தாலுகாவில், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் வருவாய் உள்வட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் தங்கள் ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கும், புதிதாக ஆதார் கார்டு பெறுவதற்கும், அரூர் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையத்திற்கு வரவேண்டி உள்ளது. இங்கு, எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து, அதிகாலையில் வரும் பொதுமக்கள் மாலை வரை காத்திருக்கும் நிலையுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், தங்கள் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய பள்ளிக்கு செல்லாமல், ஆதார் மையத்திற்கு வரவேண்டி உள்ளதால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவ, மாணவியரின் சிரமத்தை போக்கும் வகையில், பள்ளிகளில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய, சிறப்பு முகாம் நடத்த வேண்டும். மேலும், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், கூடுதலாக, ஆதார் மையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளுவர் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, கலெக்டர் சரயு நேற்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். மேலும் திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் உள்ள பூங்காவில் திருக்குறள் வாசகம் அடங்கிய விளம்பர பலகையை, 8 இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். நிகழ்ச்சியில், தாசில்தார் விஜயகுமார், ஆர்.ஐ., குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தரமான விதை விற்பனை செய்ய
வேளாண் அலுவலர் அறிவுறுத்தல்
தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என, கிருஷ்ணகிரி விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள், விதை கொள்முதல் செய்யும்போது, விதை விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள விபரங்களை சரிபார்த்து விதைகளை வாங்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதை குவியல்களின் தரம் அறிந்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விதை உற்பத்தியாளர்கள் அல்லது மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது, விற்பனை பட்டியல்களுடன், விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையையும் கேட்டு சரி பாருங்கள். பகுப்பாய்வு அறிக்கை பெறாத விதை குவியல்களில் இருந்து பணி விதை மாதிரிகளை எடுத்து, ஒரு பணி விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக, 80 ரூபாயை செலுத்தி, விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும், விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி பகுப்பாய்வு அறிக்கையை பெறலாம். விதை குவியல்களின் தரமறிந்து, நல்ல தராமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
எருது விடும் விழா
11 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி அடுத்த அம்மனேரி மண்டு மாரியம்மன் கோவில் அருகில் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. கூலியம் வி.ஏ.ஓ., வெங்கடேசன் அங்கு சென்று, மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்த கூடாது எனக்கூறியும், அங்கிருந்தவர்கள் எருது விடும் விழாவை நிறுத்தவில்லை. இது குறித்து வெங்கடேசன் புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், அதே ஊரை சேர்ந்த முனிராஜ், 39, உட்பட மொத்தம், 11 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மாட்டு பொங்கல் வழிபாடு
கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனஹள்ளி, மகாராஜகடை உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு பொங்கல் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைக்கும் மாடு, எருமை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, வண்ண பொடிகளால் அலங்கரித்து, மஞ்சள், குங்குமமிட்டு அழகு படுத்தினர். கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரிக்கரை மற்றும் பெரியஏரி மேற்குகோடியில் உள்ள விவசாய நிலத்தில், பொங்கல் வைத்து மாடுகளுக்கு படையலிட்டு, குடும்பத்துடன் வழிபட்டனர். படையலை மாடுகளுக்கு உணவாக கொடுத்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அருகிலுள்ள பெரியமுத்துார், பாறைக் கொட்டாய், நெக்குந்தி, நாகராஜபுரம், அவதானப்பட்டி உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள், மாட்டு பொங்கலை கொண்டாடினர்.
எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை கொண்டாட வேண்டுகோள்
கிழக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 107வது பிறந்தநாள் இன்று (ஜன.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள், அந்தந்த பகுதிகளில் உள்ள
எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அது சமயம் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களும், மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
வேளாண் சந்தைபடுத்துதல்
விவசாயிகளுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டார வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் மூலம், வேளாண் சந்தைப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தும் முறை குறித்து ஒருநாள் பயிற்சி புளியம்பட்டி கிராமத்தில் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்து, வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல், விதை கொள்முதல் நிலைய பயன்பாடுகள், உழவர் கடன் அட்டை மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்து விளக்கினார்.
போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் அனிதா, தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் பருத்தி, தேங்காய், கொப்பரை ஏலம் முறை குறித்தும், ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகள், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் குறித்தும் பயிற்சி அளித்தார்.
பர்கூர் வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி, துறை சார்ந்த திட்டம், மானியம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து கூறினார். புளியம்பட்டி பஞ்., தலைவர் ரங்கநாதன், விவசாய இடுபொருட்கள், சிறுதானிய கையேடு மற்றும் பயிர் காப்பீடு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ரூ.3.68 லட்சத்தில் கருப்பை புற்றுநோய்
பரிசோதனை கருவி வழங்கிய ஐ.வி.டி.பி.,
கிருஷ்ணகிரி, ஐ.வி.டி.பி., தொண்டு நிறுவனம், தன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் நோக்கில், கடந்த ஓராண்டாக, 10,000 மகளிரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி எச்.பி.வி., பரிசோதனை செய்துள்ளது. இதன் மூலம், மார்பக புற்றுநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, பெங்களூரு டாக்டர்களை கொண்டு, கிருஷ்ணகிரி புனித லுாயிஸ் மருத்துவமனையில், மெமோகிராம், ஸ்கேன் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கருப்பை மற்றும் கருப்பை வாய் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும் வகையில், 3.68 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன கருப்பை புற்றுநோய் பரிசோதனை கருவியை, கிருஷ்ணகிரி புனித லுாயிஸ் மருத்துவமனைக்கு ஐ.வி.டி.பி., நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் வழங்கி பேசுகையில், ''இதுவரை சுய உதவிக்குழு உறுப்பினர்களின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக, 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
வெவ்வேறு இடங்களில் நடந்த
சாலை விபத்தில் 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில், 3 பேர் பலியாகினர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா ஊடேதுர்க்கத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், 20; இவர் கடந்த, 14ல் இரவு பல்சர் பைக்கில், பாசிப்பட்டி அருகில், ஆலப்பட்டி - வெலகலஹள்ளி சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வெற்றிவேல் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூரில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, சின்னாறு பகுதியில் கடந்த, 14ல் இரவு, 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியதில் பலியானார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. சென்னப்பள்ளி வி.ஏ.ஓ., ரவி புகார் படி சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா தடிக்கல் அடுத்த திப்பசந்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 45, கூலித் தொழிலாளி; இவர் கடந்த, 14ல் இரவு திப்பசந்திரம், திருமலை நகர் சாலையில் முரளி, 27 என்பவருடன் பல்சர் பைக்கில் சென்றபோது, பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ரமேஷ் இறந்தார். முரளி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

