sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 18, 2024 10:29 AM

Google News

ADDED : ஜன 18, 2024 10:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

16 பயனாளிகளுக்கு

தையல் இயந்திரம் வழங்கல்

தமிழ்நாடு பிராமண சங்கம் (தாம்பிராஸ்) ஓசூர் கிளை மற்றும் ரோட்டரி பன்னாட்டு மாவட்டம் இணைந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 16 தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், தாம்பிராஸ் ஓசூர் கிளைத்தலைவர் நாகராஜன், செயலாளர் சீனிவாசன், ஆலோசகர் டாக்டர் சத்தியவாகீஸ்வரன், மகளிர் அணி செயலாளர் ரோகிணி, இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன், ரோட்டரி பன்னாட்டு மாவட்ட ஆளுனர் ராகவன் மற்றும் சங்க நிர்வாகிகள், 16 பயனாளிகளுக்கு, தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்கினர்.

பிளஸ் 2 மாணவி மாயம்

தனியார் ஊழியர் மீது புகார்

கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது பிளஸ் 2 மாணவி. கடந்த, 15 மதியம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியரின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ணகிரி அடுத்த மலையாண்டஹள்ளி புதூரைச் சேர்ந்த ஸ்ரீதரன், 22, என்ற தனியார் நிறுவன ஊழியர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

எருது விடும் விழாவுக்கு வந்தவர்பள்ளத்தில் தவறி விழுந்து பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அடுத்த நக்கல்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 60. இவர் நேற்று முன்தினம் மாலை நக்கல்பட்டியில் நடந்த எருதுவிடும் விழாவை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சீறி வந்த காளைகளை பார்த்து ஓடியவர், அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பொருட்கள்விற்ற ஐந்து பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என, நேற்று முன்தினம், அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி பகுதியை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 640 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோலமிட்ட மூதாட்டியிடம்3 பவுன் நகை பறிப்பு

காவேரிப்பட்டணம், பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் சந்திராம்பாள், 72. இவர், கடந்த, 15ல் அதிகாலை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர், அவரிடம் பைக்கை நிறுத்தி முகவரி கேட்பது போல், சந்திராம்பாள் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து சந்திம்பாள் புகார் படி காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈச்சர் லாரி - பைக் மோதல்முதியவர் உயிரிழப்பு

கெலமங்கலம் அடுத்த சொக்கன்மேடு பகுதியை சேர்ந்தவர் மாதேவன், 18. இவர், அதே பகுதியை சேர்ந்த ருத்ரப்பா, 50, ருத்ரா, 70, ஆகியோருடன், நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார்.

ஏ.புதூர் அருகே தேன்கனிக்கோட்டை - கெலமங்கலம் சாலையில் சென்றபோது எதிரில் வேகமாக வந்த ஈச்சர் லாரி மோதியதில் மூவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், முதியவர் ருத்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அரசு உயர்நிலை பள்ளியின் முன்வேகத்தடை அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவ, மாணவியர் சைக்கிள்களிலும், மத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து சென்றும், அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்புள்ள நெடுஞ்

சாலையை கடந்து, பள்ளிக்கு செல்கின்றனர்.

தினமும், 200க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இச்சாலையை கடந்து அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் மாணவர்கள், பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, பள்ளியின் முன் வேகத்தடை அமைக்க வேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில்

சுற்றுலா பொங்கல் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்துார் பஞ்.,க்கு உட்பட்ட அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் நேற்று, தமிழ்நாடு அரசு

சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பொங்கல் விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார். சுற்றுலா பொங்கல் விழாவில், சுற்றுலாத்துறையின் சார்பில் பாரதி கிராம கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், மயிலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

சுற்றுலா பயணிகளுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் சரயு பரிசுகளை வழங்கினார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆனந்தன், கிருஷ்ணகிரி தாசில்தார் விஜயகுமார், பி.டி.ஓ., முருகன், பஞ்., தலைவர் பானுப்பிரியா நாராயணன், மற்றும் அரசு அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு

தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த், 30, கூலித்தொழிலாளி. இவருக்கும், பெங்களூரு பாண்டேபாளையத்தை சேர்ந்த அஸ்வினி, 21, என்பவருக்கும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் அஸ்வினிக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதை கடந்த, 3 நாட்களுக்கு முன் தட்டிக்கேட்ட ஆனந்தை, அஸ்வினி பேசியுள்ளார். இதையடுத்து, அஸ்வினி மற்றும் அவரது பெற்றோரை பற்றி திட்டியும், தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், வாட்ஸாப்பில், ஆனந்த் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் அந்தேவனப்பள்ளியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், ஆனந்த் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்ட தேன்கனிக்கோட்டை போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

காவேரிப்பட்டணத்தில் எருது விடும் திருவிழா

காவேரிப்பட்டணத்தில் காணும் பொங்கலையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. மதியம், 2:00 மணிக்கு எருதுகளை குளிப்பாட்டி, வண்ணம் தீட்டி கொம்புகளில் அலங்கார தட்டிகளை கட்டி, சேலம் சாலையிலுள்ள விநாயகர் கோவில் முன்பு பூஜை செய்தனர்.

பின்னர் எருதுகளை ஊர் தலைவர், ஊர் கவுண்டர்கள் மற்றும் இளைஞர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதில், ஜமேதார் மேடு, கருக்கஞ்சாவடி, சந்தாபுரம், நரிமேடு, தேர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 30க்கும் மேற்பட்ட எருதுகளை கொண்டு வந்திருந்தனர்.

எருதை இளைஞர்கள் இரண்டு பக்கமும் கயிற்றால் பிடித்துக் கொண்டு விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்தனர். சாலையின் இரண்டு பக்கங்களிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எருது விடும் விழாவை காண, 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடந்தது.

இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு, கந்திகுப்பம், கிட்டம்பட்டி, லைன்கொள்ளை ஆகிய பகுதிகளில் எருது விடும் விழா நடந்தது.

தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தில் அறிமுகம்

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் புதிய அங்கமாக, நகை துறையில் புது பிராண்டாக, தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ைஸ, தி சென்னை சில்க்ஸ் குழும நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், இணை இயக்குனர்கள் பிரசன்ன அங்குராஜ், கண்ணபிரான் அறிமுகப்படுத்தினர்.

இதுகுறித்து இயக்குனர்கள் கூறியதாவது: சுபிட்ச அடையாளமாக நந்தி உருவ அமைப்பால், தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிராண்டின் முதல் கிளையை, பெரம்பலுாரில் விரைவில் தொடங்க உள்ளோம். தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ல் தங்க நகைகள் அனைத்தும், 100 சதவீதம்

ஹெச்.யு.ஐ.டி., ஹால்மார்க் தரம், வைர நகைகள் ஐ.ஜி.ஐ., தரச்சான்றிதழுடனும், ஹால்மார்க் தரத்துடன் வெள்ளி பொருட்கள், வெள்ளி

ஆபரணங்கள், பரிசு பொருட்கள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள்

காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, காவேரிப்பட்டணம்

அப்பாசாமி நாயுடு தெருவில், பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறுவர்களுக்கு லெமன் வித் ஸ்பூன், வேகம் குறைந்த சைக்கிள், கோணிப்பை ஓட்டம், இசை நாற்காலி ஆகிய போட்டிகளும், பெரியவர்களுக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு, பேரூராட்சி தலைவர்

அம்சவேணி செந்தில்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கரும்பு தோட்டத்தில் தீ

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியை சேர்ந்த விவசாயி கந்தப்பன். இவரது, 1.50 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு வெட்டக்கூடிய நிலையில் இருந்தது. அவரது நிலத்திற்கு அருகில் ராஜேந்திரன் என்பவர் நிலத்தில் நேற்று, பொங்கல் வைத்து பட்டாசு வெடித்தனர். அப்போது, கந்தப்பன் கரும்பு தோட்டத்தில் பட்டாசு விழுந்ததில், கரும்பு தோட்டம் தீப்பற்றியது. தகவலின்படி பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

மாரண்டஹள்ளியில் மஞ்சுவிரட்டு

பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில், ஏராளமான மாடுகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு விழா நடந்தது. மாரண்டஹள்ளி வேங்குதெரு, சந்தைவீதி, பை-பாஸ் ரோடு, கோட்டை மேட்டுத்தெரு, முகமதியர் தெரு, உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் இந்த மஞ்சுவிரட்டு வழக்கம்போல் நடந்தது. கடைவீதி வழியாக அழைத்து வரப்பட்ட மாடுகள், நான்கு ரோடு பகுதியிலிருந்து வெள்ளிச்சந்தை ரோடு வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த மாடுகளை, ஏராளமான இளைஞர்கள் பிடிக்க முயன்றனர். இதில், 10க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் எற்பட்டது.

எம்.ஜி.ஆர்., 107-வது பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், எம்.ஜி.ஆரின், 107வது பிறந்தநாள் விழா, நகர செயலாளர் ரவி தலைமையில் நடந்தது. தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றி வேல் முன்னிலை வகித்தார். சேலம் பை-பாஸ் சாலையிலுள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆரின் மற்றும் ஜெயலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், பொது மக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்பு வழங்கினர். இலக்கியம்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

* பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., நகர செயலாளர் ராஜா தலைமையில் கட்சியினர், எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மலர்துாவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* அரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மேல்பாட்சாபேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அரூர் நகர, அ.தி.மு.க., செயலாளர் பாபு தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் பொங்கல் விழா

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ளது சித்தேரி மலை. கிழக்கு தொடர்ச்சி மலையில், 3,600 அடி உயரத்திலுள்ள சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அழகூர் செக்கம்பட்டியில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில், போட்டமலையில் ஒரே கல்லில் ஆன பாறை மீது, கரியபெருமாள் வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது.

இது தரைமட்டத்தில் இருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பொங்கல் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு, பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: சித்தேரி பஞ்.,ல், உள்ள, 62 கிராம மக்கள், 10- நாட்கள் விரதமிருந்து, தை மாதம், 3ம் நாள் கரிநாள் அன்று, சுவாமிக்கு பொங்கல் வைத்து, பூஜை செய்வதுடன், சுவாமியை துாக்கி மலை மீது சுற்றி வருவர். அப்போது, பெண்கள் கும்மியடித்து பாட்டு பாடுவர். விழாவில், ஏற்காடு, பச்சைமலை, கருமந்துறை, வத்தல்மலை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பங்கேற்பர். இக்கோவிலில், குழந்தை மற்றும் திருமணம் வரம் வேண்டி சென்றால், நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. பல தலைமுறைகளாக இந்த விழா நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

டாஸ்மாக் கடைகளில்

குவிந்த குடிமகன்கள்

அரூரிலுள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்க, குடிமகன்கள் நேற்று காலை, 11:00 மணி முதலே வர துவங்கினர்.

இதனால், டாஸ்மாக் கடை முன், கூட்டம் அலைமோதியது. பகல், 12:00 மணிக்கு, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதும், முன்கூட்டியே வந்து

காத்திருந்த குடிமகன்கள் முண்டியடித்துக் கொண்டு, மது பாட்டில்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

நண்பர்களுடன் சிலர், அங்கேயே அமர்ந்து மது அருந்தினர். நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கத்தை விட, 3 மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், பலமணி நேரம் காத்திருந்து, மதுவை வாங்கியதாக குடி

மகன்கள் தெரிவித்தனர். அரூர் மற்றும் சுற்றுவட்டார கிராம சந்துக்கடை களிலும், மதுபாட்டில்கள் விற்பனை படுஜோராக நடந்தது.

கிணற்றில் விழுந்த பசு மாடு

உயிருடன் மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த துரிஞ்சிப்பட்டி ஒட்டுப்பள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம். இவரது விவசாய நிலத்தில், அவரது பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அங்குள்ள, 80 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

தகவலின்படி வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில்

வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்

அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.

இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் கூலிவேலை செய்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு கடந்த வாரம் இவர்கள் ஊருக்கு வந்திருந்தனர். 5 நாள் விடுமுறை முடிந்து, தாங்கள் படிக்கும் இடங்களுக்கு செல்ல, நேற்று காலை, 11:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்தனர். பஸ் இருக்கையில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

மாணவ, மாணவியரை வழியனுப்ப, அவர்களது பெற்றோரும் உடன் வந்ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல நேற்று காலை, 8:30 மணி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.

காணும் பொங்கலையொட்டி நடந்த

எருதாட்டத்தில் பங்கேற்ற 430 காளைகள்

காணும் பொங்கலையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் நடந்த எருதாட்டம் நிகழ்ச்சியில், 430 காளைகள் பங்கேற்றன.

பொங்கலையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் எருதாட்டம் மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளின் வழக்கத்திற்கு ஏற்றவாறு நடத்தப்படுகிறது. இதில், போகி பண்டிகை தினத்தில், ஒரு சில இடங்களில், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும், மாட்டுப்பொங்கல் தினத்தில் கோவில்கள் மற்றும் மண்டு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சேர்ந்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து, காணும் பொங்கலான நேற்று, எருதாட்டம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான

பகுதிகளில் நடந்தது.

எருதாட்டம் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்புடன், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், லலிகம், மிட்டாரெட்டிஹள்ளி, ஒட்டப்பட்டி, ஜருகு, தொப்பூர், உம்மியம்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம், 430 காளைகள் பங்கேற்றன.

எருதாட்டத்தை மக்கள் மிக உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட காளைகள் மற்றும் எருதாட்டத்தில் மக்களை கவர்ந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகள், விழா குழு சார்பாக வழங்கினர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us