ADDED : ஜன 28, 2024 10:18 AM
இளம்பெண் மாயம்
மாணவர் மீது புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்த சீத்தாகுட்டையை சேர்ந்தவர் சுஜாதா, 19; இவர், கடந்த, 25ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சுஜாதாவின் கணவர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், சூளகிரி அடுத்த பீலாளம் பகுதியை சேர்ந்த கணேஷ், 19 என்ற கல்லுாரி மாணவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி விவசாயி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த தியானதுர்க்கத்தை சேர்ந்தவர் வீரபத்திரப்பா, 68. விவசாயி; இவர் நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு, உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில், தன் கிராமத்தின் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த டாடா இண்டிகா கார், வீரபத்திரப்பா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தம்பியை கத்தியால் தாக்கியஅண்ணனுக்கு காப்பு
சூளகிரி தாலுகா, பேரிகை அடுத்த ராமச்சந்திரத்தை சேர்ந்தவர் கஜேந்திரன்; தனியார் நிறுவன மேற்பார்வையாளர்; இவரது அண்ணன் அர்ஜூன், 34, கூலித்தொழிலாளி; இவர்களுக்குள் பரம்பரை சொத்து தகராறு உள்ளது.
இப்பகை காரணமாக நேற்று முன்தினம் தன் தம்பி கஜேந்திரனை மரக்கட்டை மற்றும் கத்தியால் தாக்கிய அர்ஜூன், பஜாஜ் பல்சர் பைக்கை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த கஜேந்திரன், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அர்ஜூனை பேரிகை போலீசார் கைது செய்தனர்.
மீன் பிடிக்க சென்றவர்ஏரியில் மூழ்கி பலி
தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த சி.தம்மண்டரப்பள்ளியை சேர்ந்தவர் பழனி, 42, கூலித்தொழிலாளி; இவர் நேற்று அப்பகுதியிலுள்ள ராமையா ஏரியில் மீன் பிடிக்க சென்றார். தண்ணீருக்குள் இறங்கி, மீன்களை பிடிக்க முயன்றபோது, ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
தேன்கனிக்கோட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் கெலமங்கலம் போலீசார், பரிசல் மூலம் தேடி, பழனி சடலத்தை மீட்டனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
காங்., ஆர்ப்பாட்டம்காங்., கட்சியையும், காந்தியையும் கொச்சைப்படுத்தி பேசியதாக, தமிழக கவர்னர் ரவியை கண்டித்து, கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்ட, காங்., சார்பில், கிருஷ்ணகிரி, தர்மராஜா கோவில் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி நகர காங்., தலைவர் லலித் ஆண்டனி தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாராயணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஆதிதிராவிட நலத்துறை மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெண்ணை தாக்கியவர் கைது
போச்சம்பள்ளியை அடுத்த குள்ளனுாரை சேர்ந்தவர் மல்லிகா, 44; அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம், 38; உறவினர்களான இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்த நிலையில் கடந்த, 12ல் மல்லிகாவை செல்வம் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் போச்சம்பள்ளி போலீசில், மல்லிகா அளித்த புகார்படி செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் உட்பட 3 பேர் மாயம்ஊத்தங்கரை தாலுகா மேட்டுசூளகரை அருகே உள்ள பள்ளசூளகரையை சேர்ந்தவர் வெற்றிவேல், 23; இவர் கடந்த, 22ல் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் தெய்வானை, கல்லாவி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர், தளி சாலை அம்மன் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 30; இவர் கடந்த, 22ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் கீதா அளித்த புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர், ஜீவா நகரை சேர்ந்தவர் புவனேஷ், 24; கடந்த, 24ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அது குறித்து அவரது அண்ணன் நிக்காராம், ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.23.40 லட்சம் மதிப்பில்
நலத்திட்ட பணிகளுக்கு பூஜை
வேப்பனஹள்ளியில், 23.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகளை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 13.40 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டும் பணி, வேப்பனஹள்ளி அடுத்த சிங்கிரிப்பள்ளியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளுக்கு, பூமி பூஜை நடந்தது. வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, சைலேஷ் கிருஷ்ணன் தலைமை வகித்தனர். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வேப்பனஹள்ளி ஊராட்சி குழு துணைத்தலைவர் ருக்மணி, அ.தி.மு.க., நிர்வாகிகள், பஞ்., தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புகையிலை கடத்திய
மர்ம நபருக்கு வலை
மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகனசுந்தரம் மற்றும் போலீசார், உச்சனப்பள்ளி சாலை ஜங்ஷன் பகுதியில், நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஹோண்டா ஆக்டிவா மொபட்டை சோதனை செய்ய நிறுத்திய போது, சிறிது துாரத்திற்கு முன்பாக மொபட்டை நிறுத்தி விட்டு, மர்ம நபர் ஒருவர் தப்பியோடினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், மொபட்டில் சோதனை செய்தபோது, 22,000 ரூபாய் மதிப்புள்ள, 9.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. மொபட்டுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
அதியமான் பப்ளிக் பள்ளியில்
75வது குடியரசு தின விழா
ஊத்தங்கரையிலுள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில், 75வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டது. அதியமான் பப்ளிக் பள்ளி, சாரண சாரணிய இயக்க மாணவர்கள், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால்முருகன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனாஜோஸ் ஆகியோரை வரவேற்றனர்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால் முருகன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும் தேசிய உணர்வையும் ஊட்டும் வகையில் பேசினார். மாணவர்களை ஆங்கிலம் பேச ஊக்குவிக்கும் வகையில், மாதம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு, முழுமையாக ஆங்கிலம் பேசும், 5ம் வகுப்பு, 'அ' பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டு, 'பிரிமியர் இங்கிலீஸ் கம்யூனிக்கேட்டர்' என்ற கோப்பையை, பள்ளி தாளாளர் முதல்வர் மற்றும் ஆங்கில துறைத்தலைவர் ஆகியோரால் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியர் ஆடல், பாடல், கவிதை, மவுன மொழி நாடகம், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தியது, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வையும், தேசப் பற்றையும் ஏற்படுத்தியது. நிகழ்ச்சியை, 9ம் வகுப்பு மாணவியர் சுருதி, ஸ்ரீஞான சஹானா மற்றும் சாதனா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மண் திருட்டு
ஐவர் மீது வழக்கு
ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி, பொடார் ஏரியில் டிராக்டரில் மண் திருடுவதாக, ஊத்தங்கரை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தாசில்தார் மற்றும் குழுவினர் சம்பவ இடம் சென்று, மண் கடத்தியவர்களை பிடிக்க முயன்றார்.
அப்போது, உதவியாளர் செல்வம் என்பவரை கீழே தள்ளிவிட்டு, மண்ணுடன், 2 டிராக்டர்களை எடுத்துச் சென்று விட்டதாக, ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபனிடம், துணை தாசில்தார் ராஜாக்கண்ணு புகார் கொடுத்தார். அதன்படி, கல்லாவி இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓலைப்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி, 57, சம்பத், 50, பிரபாகரன், 31, அருண்குமார், 35, ஜெகநாதன், 40, ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
இதில், பிரபாகரன் என்பவர், கிருஷ்ணகிரி ஆயுத படை போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மேலாண்மை குழுவிற்கு
மாவட்ட கலெக்டர் விருது
தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர் ஒன்றியத்தில், சிறந்த பள்ளி மேலாண்மை குழுவாக குண்டலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதை கலெக்டர் சாந்தி வழங்கினார். இதில், கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் மறைவு30வது நாள் அனுசரிப்பு
அரூர் அடுத்த கைலாயபுரத்தில், மறைந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், 30வது நாள் நினைவு அனுசரிக்கப்பட்டது. இதில், தே.மு.தி.க., தொண்டர்கள் மொட்டையடித்து, விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பூண்டு விலை உயர்வுதர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 உழவர்சந்தைகளில், பூண்டின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு, 200 ரூபாய்க்கு விற்றது. பின், விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ, 330 ரூபாய்க்கும், நேற்று, 340 ரூபாய் எனவும் விற்பனையானது. பூண்டின் இந்த தொடர் விலை உயர்வால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரயில்வே தண்டவாளத்தில்ஆண் சடலம் மீட்பு
தர்மபுரி மாவட்டம் கடகத்துார் அருகே நேற்று காலை, 11:30 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தில், 40 வயது மதிக்கத்தக்க, ஆண் சடலம் கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமாக, தர்மபுரி ரயில்வே எஸ்.எஸ்.ஐ., ராமசாமி மற்றும் போலீசார், சம்பவ இடம் சென்று, சடலத்தை மீட்டனர். இதில், இறந்த நபர், பெங்களூரு - காரைக்கால் செல்லும் பாசஞ்சர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார் என தெரிய வந்தது. இருப்பினும், இறந்தவர் யார் என்பது குறித்து, அடையாளம் தெரியவில்லை. மேலும், தண்டவாளத்தை கடக்கும்போது, அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
சுங்கவரி வசூல் தகவல் பலகை சந்தையில் வைக்க கோரிக்கைபாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தினசரி, வாரச்சந்தைக்கு, சுங்க வரி வசூலிக்க ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் எடுப்பவர்கள் சந்தைக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள், வண்டி, வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்கின்றனர். ஆனால், பேரூராட்சி நிர்ணயம் செய்த தொகையை விட, கூடுதலாக வசூல் செய்படுவதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த தொகையை மட்டும் வசூல் செய்ய வேண்டும். சாலையோரம் கடை நடத்தி வருபவர்களிடம் சுங்கவரி வசூல் செய்யக்கூடாது. வசூல் தொகை யார் யாரிடம் வாங்குவது, வாகனங்கள், தொகை எவ்வளவு, எத்தனை மணி நேரம் என எழுதி, பொதுமக்களுக்கு தெரியும் படி வாரச்சந்தை, தினசரி சந்தை நடக்கும் இடங்களில், பெயர் பலகையை, பேரூராட்சி நிர்வாகம் வைக்க வேண்டும் என, பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பென்னாகரத்தில் டிராக்டர்,
இருசக்கர வாகன பேரணி
பென்னாகரம் நாகமரை 4 சாலை சந்திப்பு பகுதியில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடந்த இருசக்கர, டிராக்டர் வாகன பேரணி நடந்தது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலை அர்ஜூணன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி நாகமரை 4 சாலை சந்திப்பு பகுதியில் இருந்து, போடூர் 4 ரோடு, போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் ஆபீஸ், பழைய பஸ் ஸ்டாண்ட், முள்ளுவாடி, வழியாக அம்பேத்கர் சிலை பகுதி வரை சென்றடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும். டில்லி போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக, அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், அன்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பைக் மீது கார் மோதல்
கோழி வியாபாரி சாவு
பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சபரி, 27; டிப்ளமோ பட்டதாரி. இவர், கோழி குஞ்சு வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 3 நாட்களுக்கு முன் சபரி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் தனித்தனியாக பைக்கில், கோழி குஞ்சுகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்காக, சேலம் மாவட்டம் கொளத்துார் சென்றனர். பின், சபரி மட்டும் மீண்டும் பைக்கில் கொளத்துாரில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்தார். அப்போது கரியம்பட்டி அடுத்த, மலை மாதேஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பிரிவு ரோட்டின் அருகே, பென்னாகரத்தில் இருந்து மேச்சேரி நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சபரி துாக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்து இறந்தார். சபரியின் தாய் மகேஷ் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டாஸ்மாக்கில் கூட்டத்தை
கட்டுப்படுத்த கோரிக்கை
தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்கள் வாங்க, குடிமகன்கள் நேற்று காலை, 10:00 மணி முதலே வரத்துவங்கினர். 2 நாள் விடுமுறைக்கு பின் நேற்று பகல், 12:00 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதும், முன்கூட்டியே வந்து காத்திருந்த குடிமகன்கள் முண்டியடித்து கொண்டு ஒரே நேரத்தில், மது பாட்டில்கள் வாங்க முயன்றதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும், வழக்கத்தை விட, 3 மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் டாஸ்மாக் பணியாளர்கள் தடுமாறினர்.
எனவே, வரும் நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், டாஸ்மாக் கடை முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்., ஆர்ப்பாட்டம்சுதந்திர போராட்டத்தையும், காந்தியையும் கொச்சைப்படுத்தி பேசிய தமிழக கவர்னர் ரவியை கண்டித்து, தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தின் போது, கவர்னரை கண்டித்து முழங்கங்களை எழுப்பினர். இதில், நகர தலைவர் வேடியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு அங்காடியில்
ரூ.17 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 17 லட்சம் ரூபாய் அளவுக்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 30க்கும் குறைவான விவசாயிகள் பங்கேற்ற நிலையில், நேற்று முன்தினம், 46 பேரும் நேற்று, 60 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 107 குவியல்களாக, 3,960 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 326 முதல், 542 ரூபாய் வரை சராசரியாக, 434 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 17,19,551 ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 25,792 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஊர்காவல் படை வீரர்
சாலை விபத்தில் பலி
பாலக்கோடு அடுத்த, ஜிட்டான்டாஹள்ளியை சேர்ந்த சுரேஷ், 35; ஊர் காவல்படையில் பயியாற்றி வந்தார். நேற்று முன்தினம், பாப்பாரப்பட்டி தேர்த்திருவிழா பாதுகாப்பு பணிக்காக, ஊர் காவல்படை அலுவலக அழைப்பின் படி, தன் ஹோண்டா ஷைன் பைக்கில் கொலசனாஹள்ளி மேம்பாலத்தில் சென்றார்.
அப்போது, அவருக்கு முன்னால் சென்ற டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட் மற்றும் ஹீரோ ஹோண்டா ஆகிய வாகனங்கள் மோதி சாலையில் கவிழ்ந்தது. அப்போது, சுரேஷ் ஹீரோ ஹோண்டா பைக்கில் மோதி விழுந்ததில், பால தடுப்புச்சுவரில் மோதினார். இதில், படுகாயம் அடைந்தவரை, ஆம்புலன்ஸ் மூலம், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகார் படி மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நல்லம்பள்ளி ஸ்ரீ தங்கவேல் ஜவுளி கடையில்
105 பேருக்கு ரூ.1.50 லட்சம் பரிசு பொருட்கள்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் முன், 'ஏசி' மையமாக்கப்பட்ட, 3 தளங்களை கொண்ட ஸ்ரீ தங்கவேல் ஜவுளிக்கடை, கடந்த ஜன., 8ல் திறக்கப்பட்டது. இங்கு திறப்பு விழா மற்றும் பொங்கல் விழா சலுகையாக, 1,000 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கிய, வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. பரிசு கூப்பனை குழுக்கள் மூலம் தேர்வு செய்து வாடிக்கையாளர்கள், 105 பேருக்கு, பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏர்கூலர், எல்.இ.டி., 'டிவி', சைக்கிள், குக்கர், ஹாட்பாக்ஸ் உட்பட 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசு தினத்தில் நடந்தது.
நிர்வாக இயக்குனர்கள் பழனிசாமி, இன்பநாதன், ராவணன் மற்றும் மகேஸ்வரி பழனிசாமி, பிரபாவதி இன்பநாதன், தீபா ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சேசம்பட்டி குப்பன் வரவேற்றார். நிறுவன தலைவர்கள் தங்கவேல் மற்றும் மாதம்மாள் தங்கவேல் ஆகியோர் தலைமை வகித்து, தேர்வு செய்த வாடிக்கையாளர்கள், 105 பேருக்கு, பிரிட்ஜ், வாசிங்மெஷின், ஏர்கூலர், குக்கர் உட்பட, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ரமேஷ், சந்தோஷ், பிரதாப் உள்ளிட்ட கடை ஊழியர்கள், பரிசு பெற்ற வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஜவுளிக்கடை மேலாளர் பாப்பாரப்பட்டி சரவணன் நன்றி கூறினார்.

