ADDED : பிப் 06, 2024 10:19 AM
100 பேர் பா.ஜ.,வில் ஐக்கியம்
தேன்கனிக்கோட்டை தாலுகா, இருதுக்கோட்டை அடுத்த பேலாளத்தில், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய, பா.ஜ., கட்சி சார்பில், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா நடந்தது. ஒன்றிய தலைவர் சந்துரு ஏற்பாட்டில், மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய, 100 க்கும் மேற்பட்டோர், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில் தங்களை, பா.ஜ., கட்சியில் இணைத்து கொண்டனர். தொடர்ந்து, கெலமங்கலம் மேற்கு ஒன்றியத்தில், தலைவர் நாகராஜ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் சீனிவாஸ்ரெட்டி, முருகன், பொருளாளர் சீனிவாசன், செயலாளர் ஆனந்த், கலை மற்றும் கலாசார பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மக்கள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய, 313 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பாறைக்கோவில் தேர்த்திருவிழாகிருஷ்ணகிரி அருகே எலத்தகிரியில், நேற்று முன்தினம் இரவு திருக்குடும்ப பாறைக்கோவில் தேர் திருவிழா, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மாதா தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலர் டேவிட் ஆரோக்கியம் கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்தார். பின்னர், திருக்குடும்ப திருத்தலத்தில் வேண்டுதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அன்னை தேர் பவனி ஆலயத்தை சுற்றி வந்தது. நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஜாதி, மத வேறுபாடுகளின்றி கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
சாலை பணியாளர் சங்க பொதுக்குழுநெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க, மாநில மையத்தின் முடிவின்படி, கிருஷ்ணகிரி அரசு ஊழியர் சங்க கட்டடத்தில், சாலைப்பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் தேவன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர்களுக்கு சாலை, ஆய்வாளர் நிலை - 2, பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியின்போது இறந்த சாலைப் பணியாளர் குடும்ப வாரிசுகளுக்கு விரைவில் வாரிசுப்பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு கருவி, தளவாடங்கள், காலணிகள் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகை கடையில் கொள்ளை
முயற்சி; 3 பேர் கைது
போச்சம்பள்ளியில், தர்மபுரி - திருப்பத்துார் சாலையிலுள்ள, 2 நகை கடைகளில் கடந்த வாரம் அடுத்தடுத்து சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார், அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் பாளேதோட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்களான ஜெகன், 27, விக்னேஷ், 24, மற்றும் தர்மபுரி கோல்டன் தெருவை சேர்ந்த கண்ணன், 37, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
மாநில வாலிபால் போட்டிஓசூர் பெண்கள் அணி 3ம் இடம்
பர்கூர் அருகே, கோதியழகனுாரில், மாநில அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது. இதில், ஓசூர் பகுதி பெண்கள் அணியினர் பங்கேற்றனர். 3ம் இடத்திற்கு நடந்த போட்டியில், ஓசூர் பெண்கள் அணியும், தர்மபுரி எஸ்.டி.ஏ.டி., அணியும் மோதின. இதில், 25 - 9, 25 - 25, 25 - 11 என்ற செட் கணக்கில், ஓசூர் பெண்கள் அணி வெற்றி பெற்று மூன்றாமிடத்தை தட்டிச் சென்றது. அதற்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஓசூர் பெண்கள் அணியை, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள்
மாவிளக்கு ஊர்வலம்
பர்கூர் அடுத்த அண்ணா நகரில், மாரியம்மன் திருவிழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் விநாயகருக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பொங்கல் வைத்து பூஜை செய்து மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க, மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், இசை நாற்காலி, கோலப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு
ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கடந்த, 2022 மே மாதம், 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவினர் முயற்சியால், மாநகராட்சி கவுன்சிலர் ரஜினி, பள்ளிக்கு தேவையான மைக் செட், கொடிக்கம்பம் என, 65,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்தார். அதேபோல் தனியார் நிறுவனம் மூலம், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு ஆர்.ஓ., குடிநீர் இயந்திரங்கள், 30,000 ரூபாய் மதிப்புள்ள சேலார் லைட், 4 'சிசிடிவி' கேமராக்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான பொருட்கள், 5,000 ரூபாய் மதிப்புள்ள சத்துணவு தயாரிக்க தேவையான பாத்திரங்கள் நன்கொடையாக பெறப்பட்டன.
பள்ளி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும், இப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவை, ஓசூர் ஒன்றியத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவாக தேர்வு செய்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இக்குழுவிற்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழாவில், பெற்றோர் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, தலைமையாசிரியர் பொன்நாகேஷ் செய்திருந்தார்.
ஒகேனக்கல் குடிநீர் 'கட்'
8 பஞ்., மக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மத்துார், கவுண்டனுார், அந்தேரிப்பட்டி, குன்னத்துார், ராமகிருஷ்ணம்பதி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட, 8க்கும் மேற்பட்ட பஞ்.,களில் கடந்த, 2 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அந்த பஞ்.,களில் கிராம மக்கள் குடிநீருக்கு விவசாய கிணறுகளை தேடி அலைந்தனர். ஒரு சிலர் நீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் உதவி பொறியாளர் மீனாவிடம் கேட்டதற்கு, ''வால்வு பழுது காரணமாக, தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. அதை சரி செய்துவிட்டோம். வழக்கம்போல் இன்று தண்ணீர் வரும்,'' என்றார்.
ஓசூரில் கடும் மூடுபனி
வாகன ஓட்டிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி சுற்றுப்புற பகுதிகளில், ஆண்டுதோறும் டிச., மற்றும் ஜன.,ல் குளிர் அதிகமாக இருக்கும். காலையில் மூடுபனி காணப்படும். நடப்பாண்டும் அதிகளவில் குளிர், மூடுபனி தென்பட்டது. தற்போது, குளிர் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், நேற்று வழக்கத்தை விட அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையே தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்பட்டது. அதனால், சாலையில் முன்னால் சென்ற வாகனங்களை கூட, அருகில் சென்ற பின்தான், டிரைவர்களால் பார்க்க முடிந்தது.
காலையில் ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன. கடும் மூடுபனியால், பள்ளி, கல்லுாரி சென்ற மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். காலை, 8:00 மணிக்கு மேல் தான், மெல்ல, மூடுபனி விலகியது.
வேப்பனப்பள்ளி அருகே பெண் வெட்டி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்துள்ளது கே.என்.போடூர். இக்கிராமத்தின் அருகே, வனப்பகுதியையொட்டி உள்ள அய்யன் ஏரி பகுதியில், நேற்று காலை பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தலை, கை மற்றும் உடலின் பல பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வேப்பனஹள்ளி போலீசார், அப்பெண்ணை மீட்டு ஆம்புலன்சில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த
டாக்டர்கள் அப்பெண் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மருத்துவமனைக்கு அப்பெண்ணை ஆம்புலன்சில் அழைத்து வரும்போது, அப்பெண், தன் பெயர் நாகரத்தினம்மா என்றும், பாகலுார் அருகே முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் முதுகானப்பள்ளியில் விசாரணையை துவக்கி உள்ளனர். நாகரத்தினம்மாவை எதற்காக வேப்பனஹள்ளி பகுதிக்கு அழைத்து வந்து, கொலை செய்தார்கள். முன்விரோத கொலையா அல்லது வேறேதும் காரணமா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காதல் ஜோடி
போலீசில் தஞ்சம்
ஓசூர் ஏரித்தெருவை சேர்ந்தவர் சிவராம் மகள் பூர்ணிமா, 21. இவரும், ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பாஸ்கர்தாஸ் நகரை சேர்ந்த தங்கராஜ், 27, என்பவரும், 4 ஆண்டுகளாக காதலித்தனர். ஓசூர் தனியார் மருத்துவமனையில் தங்கராஜ் பணியாற்றி வருகிறார். தன் காதல் குறித்து கடந்த மாதம், 12 ல் தன் பெற்றோரிடம் பூர்ணிமா கூறியுள்ளார். ஆனால், வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால், காதல் ஜோடி கடந்த, 31ல் வீட்டிலிருந்து வெளியேறி, ஆந்திர மாநிலம், சித்துாரில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே தன் மகள் மாயமாகி விட்டதாக, ஓசூர் டவுன் போலீசில் கடந்த, 1ல் பூர்ணிமாவின் தந்தை சிவராம் புகார் செய்தார். இதையறிந்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு, ஓசூர் டவுன் போலீசில் நேற்று தஞ்சமடைந்தனர். இருவீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜாதி சான்றிதழ் வழங்காமல்
பழங்குடியினர் அலைக்கழிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 60க்கும் பழங்குடியின பள்ளி மாணவர்கள், ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி நேற்று பெற்றோருடன் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், 'பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி காமாட்சிபுரம், ஒப்பதவாடி காளியம்மன் கோயில், கிருஷ்ணாநகர் மற்றும் காளிக்கோயில் இருளர் காலனியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். பள்ளி செல்லும் எங்கள் குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகைகள் பெற ஜாதிச்சான்று அவசியமாகிறது. இதனால் சாதிசான்று பெற வேண்டி விண்ணப்பம் செய்தும் இதுவரை வழங்கப்படவில்லை.
ஜாதிச்சான்றுகள் இல்லாததால், 10ம் வகுப்பிற்கு பின் மேல்நிலை கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதேபோல் படித்த முடித்த பலருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பெற முடியாமல் தவித்து வருகிறோம்.
தற்போது மனுவை வாங்கிய அலுவலர்கள், சிறப்பு முகாம் நடத்தி சான்றுகள் வழங்குவதாக மீண்டும் உறுதியளித்துள்ளனர். முகாம் நடத்தும் போது, கலெக்டர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.
தர்மபுரி வனத்துறை சார்பில்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தர்மபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட, விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, குறை தீர்க்கும் நாள் கூட்டம், இன்று நடக்கிறது.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சார்ந்த, விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, 11:00 மணிக்கு தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடக்க உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வனத்துறை சார்ந்த கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு, பயனடையலாம் என, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்குவிலையில்லா சைக்கிள்
கடத்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியை ரமாதேவி தலைமையில் நடந்தது.
கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, 187 மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில், கடத்துார், தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், தி.மு.க., நகர செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.46.50 லட்சத்துக்குஅரூரில் பருத்தி ஏலம்
அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று, 46.50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 263 விவசாயிகள், 580 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,709 முதல், 7,509 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 580 குவிண்டால் பருத்தி, 38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 100 விவசாயிகள், 120 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,669 முதல், 7,262 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 120 குவிண்டால் பருத்தி, 8.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்புகடத்துாரில், இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகலட்சுமி கிருஷ்ணகிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, சேலம் மாவட்டம் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர், தொல்காப்பியன் நியமிக்கப்பட்டார். அவர், நேற்று கடத்துார் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அரூரில் கொங்கு பல்நோக்கு
பயிற்சி ஆலய திறப்பு விழா
தர்மபுரி மாவட்டம், அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கொங்கு பல்நோக்குப் பயிற்சி மையத்தை, தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., நேற்று திறந்து வைத்தார்.
விழாவில், தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பணன், சம்பத்குமார் எம்.எல்.ஏ., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழுத்
தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர் பசுபதி, கொங்கு வேளாளக்கவுண்டர்கள் சங்க செயலாளர் சேகர், பொருளாளர் தங்கராசு உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவில், பயிற்சி மையம் அமைவதற்கு நன்கொடை வழங்கியவர்கள், கொங்கு இளைஞர்கள், வள்ளி கும்மி நடனம் ஆடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறையோகிகளை சிறப்பித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
மேலும், தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கலச்சிலையை வடிமைத்த சிற்பிக்கு, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
அரசு பள்ளியில் அங்கன்வாடி மையத்துக்கு பூஜை
தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட இலக்கியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகில், புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி நடந்தது. தர்மபுரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிக்கு, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின், இப்பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கவும், அவர்களை முறையாக பணியாற்றவும் பணியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) ஜெயந்தி, பி.டி.ஓ., பிரியா, குழந்தைகள் வளர்ச்சி தொகுதி மேற்பார்வையாளர் தமிழ்மணி, பா.ம.க., மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், அங்கன்வாடி பணியாளர்கள் சுமதி, நதியா உள்பட பொதுமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
5 பவுன் சங்கிலி மூதாட்டியிடம் பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசமரத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 75. இவர் நேற்று காலை தன் வீட்டருகே நின்றுள்ளார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு, காரக்குப்பம் சாலையிலிருந்து பர்கூர் சாலையில் டூவீலரில் வந்த மர்மநபர், கிருஷ்ணவேணி கழுத்திலிருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பியுள்ளார்.
இது குறித்து கிருஷ்ணவேணி புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பர்கூர், கந்திக்குப்பம், போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களும், சங்கிலி பறிப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பட்டப்பகலில், வீட்டருகே நின்ற மூதாட்டியிடம் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓடும் காரில் தீப்பற்றி
உடல் கருகி ஒருவர் பலி
பாலக்கோடு அருகே, தர்மபுரி- - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், திடீரென தீப்பற்றியதில், காரில் சென்றவர் தீயில் கருகி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர் சஞ்சீவ், 32; இவர், ராயக்கோட்டையில் மொபைல்போன் கடை, மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார். நேற்று, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, கசியம்பட்டி பிரிவு சாலையில், தன்னுடைய மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரின் முன்பக்கத்தில் தீப்பிடித்து, கார் முழுவதும் தீ பரவியது. இதில், காரிலிருந்த சஞ்சீவ் வெளியே வரமுடியாத நிலையில், தீயில் சிக்கி, உடல் கருகி பலியானார்.
பாலக்கோடு தீயணைப்பு துறையினர், காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டியிடம் 5 பவுன் நகை
திருடி சென்றவர்களுக்கு வலை
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் நீலாவதி, 62; நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த, 40 வயது மதிக்கத்தக்க, 2 வடமாநில நபர்கள், தங்கம், வெள்ளி, பித்தளைக்கு பாலீஸ் போட்டு கொடுப்பதாக கூறினர். இதை நம்பிய நீலாவதி, வீட்டிலிருந்த வெள்ளி குத்துவிளக்குகளை எடுத்து கொடுத்தார். பின் தான் அணிந்திருந்த, 5 பவுன் நகையை கழற்றி நீலாவதி கொடுத்தார். நகைக்கு ஒருவர் பாலீஸ் போட்டு கொண்டிருந்த போது, மற்றொருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதனால் நீலாவதி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வர சென்றார். திரும்பி வந்து அவர் பார்த்த போது, தங்க நகையுடன் இருவரும் தப்பியோடி விட்டனர். அதிர்ச்சியடைந்த நீலாவதி புகார்படி, சூளகிரி போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவு மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தொப்பூரில் கன்டெய்னர்
லாரி விபத்து; டிரைவர் சாவு
தொப்பூர் கணவாய் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில், இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் சிவசங்கர், 55; இவர், கிருஷ்ணகிரியில் இருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு, கேக் செய்ய பயன்படுத்தும் கிரீமை கன்டெய்னர் லாரியில் ஏற்றிச் சென்றார். லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று காலை, 8:20 மணிக்கு சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் இருந்த கன்டெய்னர் தனியாக சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் சிவசங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர் சம்பவ இடம் சென்று, டிரைவரின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறையினர் விழிப்புணர்வு
உணவு பாதுகாப்பு துறை சார்பாக, உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம், உணவு பொருள்களில் கலப்படம் கண்டறிதல், தரம் அறிதல் குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நியமன அலுவலர் பானுசுஜாதா, சேலம் நடமாடும் பகுப்பாய்வு வாகனம் பொறுப்பாளர் சாமுண்டீஸ்வரி வழிகாட்டல் படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில், பாலக்கோடு மகளிர் பள்ளியில், உணவு பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து, நேரடி செயல் விளக்கமும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் புனிதா, உதவி தலைமை ஆசிரியர் சங்கர் மணிமாலா மற்றும் ஆசிரியைகள் தலைமையில் மாணவிகள், 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பட்டதாரி
பெண் மாயம்
தர்மபுரி அடுத்த செட்டிகரையை சேர்ந்த பெயின்டர் தொழிலாளியின் மகள் பானுஸ்ரீ, 21. பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
நேற்று முன் தினம் வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர், திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் பஸ் மோதி 3 பேர் காயம்
கிராம மக்கள் சாலை மறியல்
ஓசூர் அடுத்த, பொம்மாண்டப்பள்ளி திருப்பதி வேலி லேஅவுட்டை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணா, 45, தனியார் நிறுவன ஊழியர்; இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு, அந்திவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும், 14 வயது மகள் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகனை பள்ளியில் விட அழைத்து கொண்டு, சுசூகி மொபட்டில், ராயக்கோட்டை - அத்திப்பள்ளி சாலையில் சென்றார். நஞ்சாபுரம் பஸ் ஸ்டாப் அருகே, அவ்வழியாக தனியார் நிறுவன தொழிலாளர்களை ஏற்றி வந்த பஸ், மொபட் மீது மோதியது. இதில், சுரேஷ் கண்ணா மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்பகுதியில், தனியார் நிறுவன பஸ்சால் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி, 25 பெண்கள் உட்பட, 175க்கும் மேற்பட்டோர், தனியார் நிறுவன பஸ் கண்ணாடிகளை உடைத்து, நஞ்சாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த வேகத்தில் தனியார் நிறுவன பஸ்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.