ADDED : ஜூன் 09, 2024 02:25 AM
மதுரை, : மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவப்பிரிவில் வலியை குறைப்பதற்கு மெழுகு ஒத்தட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இயற்கை மருத்துவர் நாகராணி நாச்சியார் கூறியதாவது: சிகிச்சையின் ஒருபகுதியாக மெழுகு ஒத்தடம் தரப்படுகிறது.
கை, கால் மூட்டு வலி, நீண்டநாள் முதுகுவலிக்கு எண்ணெய் மசாஜ், நீராவி, வாழையிலை, மண் சிகிச்சை, அகச்சிவப்பு கதிர்களின் ஒளி பாய்ச்சி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உருகிய மெழுகில் காட்டன் துணியை நனைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடமாக கொடுக்கும் போது வலி குறைகிறது. அடுத்ததாக ஐஸ் ஒத்தடம் கொடுக்கும் போது நிவாரணம் கிடைக்கிறது.
ஊசியால் குத்தும் அக்குபஞ்சர் சிகிச்சையும் உள்ளதால் தலைவலி, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் பயன்பெறலாம்.
இடுப்பு பகுதிக்கு மட்டுமான ஹிப் பாத் தெரபி' சிகிச்சைக்காக புதிதாக நான்கு குளியல் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் உடலுக்கான நீராவி குளியல் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது என்றார்.