/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜவுளி உற்பத்தியில் கொட்டிக்கிடக்குது வாய்ப்பு மடீட்சியா கருத்தரங்கில் தகவல்
/
ஜவுளி உற்பத்தியில் கொட்டிக்கிடக்குது வாய்ப்பு மடீட்சியா கருத்தரங்கில் தகவல்
ஜவுளி உற்பத்தியில் கொட்டிக்கிடக்குது வாய்ப்பு மடீட்சியா கருத்தரங்கில் தகவல்
ஜவுளி உற்பத்தியில் கொட்டிக்கிடக்குது வாய்ப்பு மடீட்சியா கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜூலை 28, 2024 06:14 AM
மதுரை : தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் அதிக வாய்ப்பும் தேவையும் இருப்பதாக மதுரை மடீட்சியாவில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் தமிழக அரசின் துணிநுால் துறை ஜவுளி ஊக்குவிப்புப் பிரிவு சார்பில் தொழில்நுட்ப ஜவுளி விழிப்புணர்வு கருத்தரங்கு மடீட்சியாவில் நடந்தது. தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (சிட்ரா) அறிவியல் அலுவலர் கோபால கிருஷ்ணன் பேசுகையில், ''ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்படும் அனைத்து வகை ஜவுளிகளும் தொழில்நுட்ப ஜவுளிகள். இவ்வகை ஜவுளிகளுக்கான தேவையும், வாய்ப்பும் அதிகளிவில் உள்ளது,'' என்றார்.
போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் 'மொபில்டெக்', அணை கட்டுமானம், மண் அரிப்பை தடுத்தல் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் 'ஜியோடெக்', ராணுவம், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உடைகளான 'புரோடெக்', மருத்துவ துறைகளில் பயன்படுத்தப்படும் 'மெடிடெக்', விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் 'அக்ரோடெக்' உள்ளிட்ட 12 வகையான தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்தும் அவர் விளக்கினார்.
துணிநுால் துறை மண்டல துணை இயக்குனர் திருவாசகர் பேசுகையில், ''18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நுாற்பு, நெசவு, பின்னல், தையல், சாயமிடுதல், தொழில்நுட்ப ஜவுளி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.
பயிற்சி காலம் 180 முதல் 480 மணி நேரம். குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 30 பேருக்கு சம்பந்தப்பட்ட ஜவுளி தொழிற்சாலைகளிலும், சிட்ரா பயிற்சி கூடங்களிலும் பயிற்சி வழங்கப்படுகிறது,'' என்றார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்பாடு குறித்தும், மத்திய அரசின் தொழில்முனைவோர்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
நிர்வாகி இளங்கோ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இணைச் செயலாளர் அரவிந்த் நன்றி கூறினார்.