ADDED : ஜூன் 09, 2024 04:05 AM

மதுரை : உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்ற 'லோக் அதாலத்'தில் 4594 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. ரூ.21 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 769 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லோக் அதாலத் நடந்தது. நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, கே.ராஜசேகர், ஜி.அருள்முருகன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், பாண்டுரங்கன், மோகன்தாஸ், நம்பி, பூபாலன், உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் ஜெய இந்திரா படேல், கிருஷ்ணவேணி, சுரேஷ்குமார் ஐசக்பால், வெங்கடேசன், டாக்டர் பாலாஜி விசாரித்தனர்.
416 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. 27 வழக்குகளில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் இடையே சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரத்து 597 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பதிவாளர் (நீதித்துறை) வெங்கடவரதன் ஏற்பாடு செய்திருந்தார்.
மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் லோக் அதாலத் நடந்தது.
மதுரை, மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி நீதிமன்றங்களில் 23 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. விசாரணைக்கு 4674 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. 4567 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.19 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 172 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
நீதிபதிகள் செங்கமலச்செல்வன், ரோகிணி, ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிபதிகள் சரவணபவன், காயத்ரி தேவி, பழனிவேல்ராஜன் பங்கேற்றனர். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.