/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமூகவிரோத செயல்... ஆக்கிரமிப்பு... குப்பை குவியல்... கலக்கத்தில் கற்பக நகர் குடியிருப்போர்
/
சமூகவிரோத செயல்... ஆக்கிரமிப்பு... குப்பை குவியல்... கலக்கத்தில் கற்பக நகர் குடியிருப்போர்
சமூகவிரோத செயல்... ஆக்கிரமிப்பு... குப்பை குவியல்... கலக்கத்தில் கற்பக நகர் குடியிருப்போர்
சமூகவிரோத செயல்... ஆக்கிரமிப்பு... குப்பை குவியல்... கலக்கத்தில் கற்பக நகர் குடியிருப்போர்
ADDED : மே 12, 2025 05:55 AM

மதுரை: மதுரை மாநகராட்சி (வார்டு 10) கற்பக நகரில் சமூக விரோத செயல்கள், ஆக்கிரமிப்பு, குப்பை குவியல் என பல 'கொடுமைகளுக்கு' நடுவே வாழ்வதாக குடியிருப்போர் புலம்புகின்றனர்.
கற்பக நகர் 1 முதல் 16 தெருக்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடியிருப்போர் சங்க செயலாளர் ஜெயபிரகாஷ், உறுப்பினர்கள் செல்லப்பா, ராஜகோபால், ஜேக்கப் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் தெருக்களில் கடை வைக்க அனுமதி கொடுக்கின்றனர். இதனால் தெரு அளவு குறைந்து கொண்டே வருகிறது. அனுமதி கொடுப்பதற்கு முன்பு குடியிருப்போரிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.
மாட்டுத்தாவணிக்கு செல்ல இந்த ரோட்டைதான் வாகனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் ரோடு பள்ளம் மேடாக உள்ளது. வரி செலுத்தியும் முறையான பராமரிப்பு, பாதுகாப்பான சூழல் இல்லை.
பணியாளர் பற்றாக்குறை
அனைத்து தெருக்களிலும் குப்பை குவியலை காணலாம். துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. வாரத்திற்கு 3 முறை மட்டுமே வருகின்றனர்.
மற்ற தெரு குப்பையையும் இங்கே கொட்டுகின்றனர். கொசுத்தொல்லை, துர்நாற்றம் அதிகரிக்கிறது.
சிலர் குப்பையை எரிப்பதால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கிறது.
பாதாளச்சாக்கடை லைன்கள் சேதம்
கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக அனைத்து இடங்களிலும் குழி தோண்டினர். இதனால் பல இடங்களில் பாதாளச்சாக்கடை இணைப்பு லைன்கள் உடைந்து விட்டன.
இதற்குரிய செலவை அரசே ஏற்கும் என்றனர். ஆனால் ரூ. 30 ஆயிரம் வரை நாங்களே செலவு செய்தோம். கழிவுநீர் இணைப்பு பைப்கள் மாற்றித்தர வேண்டும். சில இடங்களில் புதிய இணைப்பு லைன்களில் குடிநீர் வீணாகிறது.
குடிநீர் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. அதுவும் சில நேரங்களில் 'வேலை நடக்கிறது' எனக்கூறி நிறுத்தி விடுகின்றனர்.
இவ்வாறு கூறினர்.

