ADDED : ஜன 27, 2024 04:31 AM
திருமங்கலம்,: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள கிராசிங்கில் தினமும் 60 முறைக்கு மேல் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது. இதன் எதிரொலியாக அந்தப் பகுதியில் ரூ.33.47 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., தளபதி, நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பூமி பூஜை நடந்தது. மேம்பால பணியின் ஒப்பந்ததாரர் முஸ்லிம் என்பதால், தொழுகை நடத்தியும், பிறகு ஹிந்து முறைப்படியும் பூஜைகள் நடத்தப்பட்டன. மண்அள்ளும் இயந்திரம் மூலம் சிறிதாக பள்ளம் தோண்டி பணிகள் தொடங்கப்பட்டன.
இதற்கு முன்னர் இதேஇடத்தில் பாலம் கட்டுவதற்காக மூன்று முறை பூமி பூஜை நடத்தியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இம்முறையாவது பாலம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

