ADDED : ஜன 26, 2024 05:38 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே கல்லணையில் கல்குவாரி புதிதாக இயக்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், பெரிய உலகாணி கிராமத்தில் நடந்தது.
ஆர்.டி.ஓ., சாந்தி, சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்தனர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசுகையில், ''அரசு அதிகாரிகள் குவாரி செயல்படுவதற்கான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா, கல்குவாரி செயல்பட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என நேரில் பார்வையிட்டு அனுமதி வழங்க வேண்டும். கல்குவாரி செயல்படுவதால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்'' என்றனர்.
கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு உலகாணி கிராம இளைஞர்கள் அதிகாரிகளிடம் மனு அளித்ததனர். அதில், ''தங்களது கிராமத்தில் இயங்கும் கல்குவாரிகளில் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. லாரிகளில் அதிக லோடுஏற்றிய லாரிகள், அதிவேகமாக செல்கின்றன. வாகனங்கள் தார்ப்பாய் கொண்டு மூடி இயக்கப்படவில்லை என, அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
பாறைகளை உடைக்க வெடி வைப்பது, டிரில் இயந்திரங்களால் பூமியை தோண்டும் போது ஏற்படும் அதிர்வுகளால் கருத்தரிக்கும் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆகவே, புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

