/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையை மீறினால் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையை மீறினால் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையை மீறினால் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையை மீறினால் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 23, 2025 02:44 AM
மதுரை:நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண, இறுதி அறிக்கை தாக்கல் செய்வது குறித்து டி.ஜி.பி.,வெளியிட்ட சுற்றறிக்கையை பின்பற்றத் தவறினால் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அருகே சத்திரப்பட்டி அசோக், தன்ராஜ் உட்பட 8 பேர் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கியதாக 2012 ல் சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். அதை ரத்து செய்யக்கோரி 8 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
2024 ல் விசாரணைக்கு வந்ததது. போலீஸ் தரப்பு,'விசாரணை முடிந்து மதுரை (ஜெ.எம்.5) நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.இறுதி அறிக்கையின் நகல் கோரி மதுரை (ஜெ.எம்.,5 ) நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மனு செய்தனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி மனு திருப்பி அனுப்பப்பட்டது.
2024 ல் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி 8 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.மனுதாரர்கள் தரப்பு: ஏற்கனவே விசாரணையின்போது போலீஸ் தரப்பில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அது தற்போதுவரை கோப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.அரசு தரப்பு: இ-பைலிங்(மின்னணு) முறையில் 2023 ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் அதை தாக்கல் செய்ததற்கு சான்றாக தவறுதலாக (பி.ஆர்.சி.,) எண் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: சில குறைபாடுகளுக்காக சம்பந்தப்பட்ட நீதிபதியால் இறுதி அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது.
பின் அது 2024 ல் ஜெ.எம்.,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, மதுரை கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.2012 ல் பதிவான வழக்கிற்கு 11 ஆண்டுகளுக்குப் பின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சில குறைபாடுகளுக்காக இறுதி அறிக்கை உடனடியாக தாக்கல் செய்யப்படவில்லை.இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி வழக்குகளை மறு ஆய்வு செய்வது, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து டி.ஜி.பி.,2025 ஜன.20 ல் சுற்றறிக்கை வெளியிட்டார்.
அதில்,'இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதோடு மட்டும் விசாரணை அமைப்பின் பங்கு நின்றுவிடாது. வழக்கு விசாரணையை திறம்பட நடத்தப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,கள் தங்கள் அதிகார வரம்பிற்குள் நிலுவையிலுள்ள என்.டி.எப்.(கோப்பிற்கு எடுக்கப்படாத) வழக்குகளை மாதாந்திர கூட்டத்தில் மறுஆய்வு செய்ய வேண்டும்.
மண்டல போலீஸ் ஐ.ஜி.கள், போலீஸ் கமிஷனர்கள், டி.எஸ்.பி.,கள் சிறப்பு கவனம் செலுத்தி என்.டி.எப்.,வழக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய நிலுவை வழக்குகளுக்கு இ-பைலிங் முறையில் படிப்படியாக இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டும். என்.டி.எப்.,வகை வழக்குகள் முற்றிலும் இல்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும்.
இதில் குறைபாடு ஏற்பட்டால் தீவிரமாக கருதப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்காக டி.ஜி.பி.,யை பாராட்டுகிறோம்.
சுற்றறிக்கையை வெளியிடுவது மட்டும் நோக்கத்தை நிறைவேற்றாது.
அதை உணர்வுடன் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
உயரதிகாரிகளால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை பின்பற்றத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.