/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நயினார் நாகேந்திரன் கருத்து
/
அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நயினார் நாகேந்திரன் கருத்து
அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நயினார் நாகேந்திரன் கருத்து
அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நயினார் நாகேந்திரன் கருத்து
ADDED : செப் 16, 2025 04:42 AM
மதுரை: ''அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என மதுரை வடக்கு சட்டசபை தொகுதி பூத் கமிட்டி கூட்டத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவர் கூறியதாவது:
பா.ஜ., வின் பூத் கமிட்டி மாநில மாநாடு செப்., 21ல் திண்டுக்கல் கொடைரோட்டில் நடக்க உள்ளது. 1947 முதல் தற்போது வரை, உயர்த்திய வரியை குறைத்தாக சரித்திரம் இல்லை. ஜி.எஸ்.டி., வரி குறைப்பை பின்பற்றி, தேர்தல் வருவதால் தமிழகத்தில் உயர்த்திய சொத்து வரி, மின்சார கட்டணத்தை மாநில அரசும் குறைக்கும் என நினைக்கிறேன்.
ஜி.எஸ்.டி., வரி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமின்றி, எல்லா மாநில நிதியமைச்சர்களும் முடிவெடுப்பர். ஆனால்,ஜி.எஸ்.டி., வரிக்கு மத்திய அரசே காரணம் என தமிழக மக்களிடம் மாயையை உருவாக்கி வைத்திருந்தனர். 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளதால் 90 சதவீத தொழில் துறையினர் பயன் பெறுவர்.
மக்களுக்கு தீபாவளி பரிசாக இந்த வரிக் குறைப்பை நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் வழங்கியுள்ளனர். மக்கள் இந்த வரிக் குறைப்பை வரவேற்கின்றனர்.ஆனால் முதல்வர் ஸ்டாலின் வரவேற்க மறுக்கிறார். மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை வரவேற்கும் எண்ணம் முதல்வருக்கு இல்லை.
அ.தி.மு.க.,வில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளதால் பொறுத்திருந்து பார்ப்போம். ''மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறாரோ, அவரை வெற்றி பெற வைக்க வேலை செய்ய தயார்'' என அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கூறியிருந்தார். தற்போது முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என கூறுகிறார்.இனி வரும் காலங்களில் என்ன கூறுகிறார் என்பதை பார்க்கலாம்.
2026ல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தி.மு.க., வை ஆட்சியை விட்டு அகற்றும். 2029ல் லோக்சபாவுக்கு தே.ஜ., கூட்டணியின் எம்.பி.,க்கள் பெரும்பான்மையாக செல்ல வேண்டும். அமித்ஷா சென்னையில் வந்து தே.ஜ., கூட்டணியை அறிவித்தார். அ.தி.மு.க.,வில் ஜனநாயகம் உள்ளதால் அதன் தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து வருகிறார்கள்.தி.மு.க., வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என பதவி வகித்தால் எப்படி ஜன நாயகம் இருக்கும்.
ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்னென்ன நன்மைகள் உள்ளன என விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.ஐந்து ஆண்டுகளில் சட்டசபை, லோக்சபா, உள்ளாட்சி தேர்தல்களால் அரசுக்கு ஏராளமாக பணம் செலவாகிறது.அதை குறைக்கத்தான் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியதை விஜய் படித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.