/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரு வயது குழந்தையின் நுரையீரலில் சிக்கிய பரோட்டா
/
ஒரு வயது குழந்தையின் நுரையீரலில் சிக்கிய பரோட்டா
ADDED : மே 17, 2025 01:33 AM
மதுரை:உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த பரோட்டா துண்டுகளை 'பிரான்கோஸ்கோப்பி' கருவி மூலம் கண்டறிந்து அகற்றியதாக மதுரை ரியோ குழந்தைகள் நல மருத்துவமனை தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: குழந்தைக்கு மூன்று நாட்களாக காய்ச்சல், இருமலுடன் மோசமான நிலையில் ரியோ மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். நிமோனியாவிற்கான சில அறிகுறிகள் காணப்பட்டதால் நுரையீரலுக்குள் அந்நியப் பொருட்கள் சென்றிருக்கலாம் என சந்தேகத்தில் 'சி.டி.ஸ்கேன், விர்ச்சுவல் பிரான்கோஸ்கோப்பி' பரிசோதனை செய்ததில் எதுவும் தெரியவில்லை. இடது நுரையீரல் குழாயின் திடீர் துண்டிப்பு அறிகுறியானது அந்நியப்பொருள் இருப்பதை உறுதி செய்தது. 'பிரான்கோஸ்கோப்பி' பரிசோதைனையில் இடதுகீழ் நுரையீரல் குழாயில் சிக்கியிருந்த பரோட்டா துண்டுகள் அகற்றப்பட்டன.
தற்போது குழந்தை இயல்பாக சுவாசிக்கிறது. குழந்தை நுரையீரல் நிபுணர் ஹரிகிருஷ்ணன், குழந்தைக்கான அவசர சிகிச்சை நிபுணர்கள் தினேஷ் பாபு, ஹர்ஷவர்த்தன், திரிபுரசுந்தரி, மாணிக்கம் ஆகியோர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர் என்றார்.