ADDED : ஜன 26, 2024 05:36 AM

மேலுார்: கம்பூரில் இளங்காமுடி அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் புரவிகள், பதுமைகள் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் நாளான இன்று (ஜன.26) குதிரை பொட்டலில் இருந்து புரவிகள் மற்றும் பதுமைகள் முத்துபிடாரி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் மாவிளக்கு ஏற்றியும், குழந்தை வரம் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
அவற்றை நாளை(ஜன.27) கோயிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள இளங்காமுடி அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்வர். வழியில் ஈட்டிக்கார சாமி குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாம் நாள் கோயில் முன் கிடாவெட்டி பொங்கல் வைத்து வழிபடுவர். கம்பூர், தேனங்குடிபட்டி, அய்வத்தாம்பட்டி பொதுமக்கள் கலந்து கொள்வர்.

