/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் லஞ்ச ஒழிப்பு வழக்குகள் கிடப்பில் போட வாய்ப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர போலீசார் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 07, 2025 06:51 AM
மதுரை: லஞ்சஒழிப்புத்துறை வழக்குகளை இனி அந்தந்த மாவட்ட முதன்மை நீதிமன்றமே விசாரிக்கும் என்ற மத்திய அரசின் சட்டதிருத்தத்தால் வழக்குகள் தேங்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் தண்டனை பெற்று தருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கினால் கைது செய்யவும், அரசியல்வாதிகள், அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால் அதுகுறித்து விசாரிக்கவும் லஞ்சஒழிப்புத்துறை 1964ம் ஆண்டு போலீஸ் துறையில் ஏற்படுத்தப்பட்டது.
லஞ்சஒழிப்பு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் 2011ல் சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் அமைக்கப்பட்டன. 2013-14ல் விழுப்புரம், சேலம், சிவகங்கை, நெல்லையில் அமைக்கப்பட்டன.
தமிழக அளவில் தலைமை குற்றவியல் நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 46 நீதிமன்றங்கள் லஞ்சஒழிப்புத்துறை வழக்குகளை விசாரித்தன.
இந்நிலையில் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளுக்கு பதிலாக மத்திய அரசு பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்டத்தை அமல்படுத்தியது. இதில் சிறப்பு நீதிமன்றங்கள் லஞ்சஒழிப்பு வழக்குகளை விசாரிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. மாவட்ட முதன்மை நீதிபதியே விசாரிக்க தகுதியுடையவர் என சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால், இம்மாதம் முதல் லஞ்சஒழிப்புத்துறையின் புதிய வழக்குகளை மாவட்ட முதன்மை நீதிபதியே விசாரிப்பார். பழைய வழக்குகளை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தொடர்ந்து விசாரிப்பார்.
போலீசார் கூறியதாவது:
ஏற்கனவே மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு அதிக வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
இச்சூழலில் லஞ்சஒழிப்புத்துறையின் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பில்லை. விசாரணையும் விரைவாக நடக்காது.
முதன்மை நீதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேறு நீதிபதிக்கு லஞ்சஒழிப்பு வழக்குகளை மாற்றவும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புத்துறை தொடர்பான வழக்குகளை மட்டும் விசாரிப்பதால் விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு தண்டனை பெற்று தருகிறோம். இனி புதிய வழக்குகளில் முதன்மை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உடனடியாக தண்டனை பெற்றுத்தருவது சந்தேகம்தான்.
எனவே பழைய முறைபடி சிறப்பு நீதிமன்றமே லஞ்சஒழிப்பு வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறினர்.