/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தும்பைப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழா
/
தும்பைப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழா
ADDED : ஜன 17, 2024 07:01 AM

மேலுார் : மேலுார், தும்பைப்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீரகாளியம்மன் கோயிலில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து மதநல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடினர்.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கிராமம் சார்பில் பணம் வசூலித்து முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தரகன் வகையறாவிடம் ஒப்படைத்து ஜவுளிகள் வாங்கப்பட்டது.
புதிதாக வாங்கிய ஜவுளிகள் கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பெரிய மந்தை திடலில் வைக்கப்பட்டு அனைவரும் சுவாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து தரகன் வகையறாவை சேர்ந்தவர்கள் புதிய ஜவுளிகளை சுமந்து கொண்டு வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு புதிய ஜவுளிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மன் மற்றும் கோயில் மாட்டுக்கு அணிவித்து மஞ்சு விரட்டு நடந்தது.
அதற்கு முன்பாக மதநல்லிணக்க பொங்கல் வைத்து கோயிலில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சுவாமி தரிசனம் செய்தனர். ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே மத நல்லிணக்க பொங்கல் விழா நடப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

