/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருச்செந்துார் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்கள் உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
திருச்செந்துார் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்கள் உயர்நீதிமன்றத்தில் தகவல்
திருச்செந்துார் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்கள் உயர்நீதிமன்றத்தில் தகவல்
திருச்செந்துார் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்கள் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூலை 03, 2025 08:06 AM

மதுரை: திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்துடன் தமிழ் மந்திரங்கள் இடம்பெறும் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் ரத்தினபுரி வியனரசு தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின்போது சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் பயன்படுத்த ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை 7 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
கடம்பூர் செல்வகுமார், 'திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேகத்தில் கருவறை, யாகசாலை முதல் ராஜகோபுரம் வரை தமிழ் மந்திரங்கள் ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.இதுபோல் செந்தில்நாதன் என்பவர் மனு செய்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் நாராயணன், ராஜிவ் ரூபஸ் ஆஜராகினர்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், அரசு வழக்கறிஞர் சுப்புராஜ், கோயில் தரப்பு வழக்கறிஞர் முத்து கீதையன் ஆஜராகி கூறியதாவது: சமஸ்கிருத மந்திரங்களுடன் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மந்திரங்களை ஓதுவார்கள் ஓதுவர்.இவ்வாறு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தனர்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகி தீர்வு காணலாம். வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டனர்.