/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்
/
50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்
50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்
50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்
ADDED : ஜூன் 16, 2025 12:13 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 31 வது வார்டில் தல்லாகுளம், காந்தி மியூசியம், மருத்துவ கல்லுாரி, கால்நடை மருத்துவமனை, தமுக்கம் மைதானம், மாநகராட்சி கமிஷனர் அலுவலகம், ராஜாஜி பூங்கா ஆகிய இடங்கள் உள்ளன. இதனால் இப்பகுதிகள் மற்ற வார்டுகளை விட மாநகராட்சியின் தனிக்கவனத்தில் இருக்கிறது.
கரும்பாலை கிழக்குத் தெருவில் இருந்து கே.கே.நகர் சாலை பள்ளம் மேடாக உள்ளதால் சரிசெய்வது அவசியம். இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல சிரமம் உள்ளது. குப்பையை தினமும் அப்புறப்படுத்தினாலும், மதியத்திற்குள் மீண்டும் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அவ்வழியே செல்வோர் துர்நாற்றத்தில் தவிக்கின்றனர்.
சித்திரைத் திருவிழாவில் தனிக்குழு அமைத்து டன் கணக்கான குப்பையை மேலாண்மை செய்தது போல் இதற்கும் தீர்வு காண்பது அவசியம். தெருநாய்களை பிடித்து, கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவது நிரந்தர தீர்வாகாது.
தல்லாகுளம் கோயிலில் இருந்து அமெரிக்கன் கல்லுாரி வரை ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ரோடு சரியில்லை
பாஸ்கரன்: நல்ல தண்ணீர் குழாய், பாதாள சாக்கடைக்காக தோண்டிய சாலைகளை இன்னும் சரி செய்யவில்லை. ஐம்பதடி ரோட்டை ஆக்கிரமித்து 30 அடியாக்கி விட்டனர். சம்பந்தப்பட்டோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீருக்கு சிக்கல்
மாரியப்பன்: ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வருகிறது. இருப்பினும் சிலர் மின் மோட்டாரை பயன்படுத்தி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் கிடைப்பது சிக்கலாகிறது. தல்லாகுளம் பெருமாள் கோயில், நீச்சல்குளம் பகுதிகளில் 'இரவு நேர' சமூகவிரோதிகள் சிலர் இளைஞர்களை குறி வைத்து செயல்படுகின்றனர். போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
பிரச்னைகளை தீர்க்க முயற்சி
கவுன்சிலர் முருகன் கூறியதாவது: எம்.பி., நிதியில் இருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் திடல், படிப்பகம் போன்ற உயர்கோபுர மின் விளக்குகள் சமீபத்தில் அமைக்கப்பட்டன. கே.கே.நகர் மெயின் ரோட்டில் கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பெரியாறு குடிநீர் திட்டத்தில் அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வசதி வழங்கும் பணிகள் நடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் தார்ச்சாலை, முதலியார் கிழக்குத் தெருவில் சிமென்ட் சாலை அமைத்துள்ளோம்.
கண்மாய் மேலத்தெருவில் ரூ.5 லட்சத்தில் போர்வெல் அமைத்துள்ளோம். ஏ.வி., பாலப்பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து நெரிசல் சரியாகும்.
எஸ்.எம்.நகரில் சமுதாயக்கூடம் கேட்டுள்ளோம். தல்லாக்குளம் ரேஷன் கடை பழமையான கட்டடத்தில் வாடகைக்கு இயங்குவதால் புதிய கடைக்கு எம்.எல்.ஏ., நிதியில் ஒதுக்கீடு கேட்டுள்ளோம்.
தமிழ்ச்சங்கம் எதிரே கால்வாயை துார்வாருவதற்கு, இயந்திரங்கள் கிடைப்பது தாமதமாவதால் கமிஷனரிடம் மனு அளிக்க உள்ளேன். மக்களின் பிரச்னைகள் தீர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.