ADDED : செப் 16, 2025 04:40 AM

சோழவந்தான்: சோழவந்தான் சோலை நகர் மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அப்பகுதியினர் பரிதவிக்கின்றனர்.
அப்பகுதி நாகேந்திரன் கூறியதாவது: மின்வாரிய அலுவலகம் எதிரே சோலை நகர் உள்ளது. இப்பகுதியில் பிளாட்டுகள் அமைத்து ஏராளமான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. மெயின் ரோட்டின் குறுக்கே செல்லும் சாக்கடை கால்வாய் மேல் சிறிய பாலம் அமைத்து மூடப்பட்டிருந்தது. சில நாட்கள் முன்பு கால்வாயை சுத்தம் செய்த பேரூராட்சி பணியாளர்கள் சரியாக மூடாமல் விட்டுச் சென்றதால் சிறிய பள்ளம் ஏற்பட்டது.
நாளடைவில் பள்ளம் பெரிதாகி சாக்கடைக் கால்வாயை மூடிவிட்டது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. முதியோர், பெண்கள், குழந்தைகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். கனரக வாகனங்கள் செல்ல வழியின்றி கட்டுமானப் பணிகள் பாதிப்படைகின்றன.
இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன விபத்து ஏற்பட்டு விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. சாக்கடை கால்வாய் மூடப்பட்டுள்ளதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. பேரூராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.