/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமுதாயக் கூடமும் இல்லை; சங்கடமும் தீரவில்லை: எல்லா பிரச்னைகளும் 76வது வார்டில் உள்ளதாம்
/
சமுதாயக் கூடமும் இல்லை; சங்கடமும் தீரவில்லை: எல்லா பிரச்னைகளும் 76வது வார்டில் உள்ளதாம்
சமுதாயக் கூடமும் இல்லை; சங்கடமும் தீரவில்லை: எல்லா பிரச்னைகளும் 76வது வார்டில் உள்ளதாம்
சமுதாயக் கூடமும் இல்லை; சங்கடமும் தீரவில்லை: எல்லா பிரச்னைகளும் 76வது வார்டில் உள்ளதாம்
ADDED : பிப் 06, 2024 07:27 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 76 வது வார்டில் குப்பையால் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவுவது, பராமரிக்காத பாதாள சாக்கடை, பயனற்ற குடிநீர் சுத்திகரிப்பு அறை பிரச்னை போன்றவற்றால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வார்டு கட்ரா பாளையம், கிளாஸ்கார தெரு, வாணியம் மார்க்கெட் குறுக்கு சந்து, பாண்டி பஜார், பர்மா காலனி, அலாவுதீன் தோப்பு, பெருமாள் கோயில் தெருக்கள், நேதாஜி ரோடு பகுதிகளை கொண்டுள்ளது.
இங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பராமரிப்பு இன்றி பாதாள சாக்கடைகள் உள்ளன. 2017 ல் தொடங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தால் இதுவரை பயன்பாடு இல்லை.
திடீர் நகர் காசியம்மாள்: எங்கள் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லை. வீடுகளிலிருந்து குப்பையை ஜன்னல் வழியே பின்புறம் வீசுகின்றனர். இதனை அகற்ற துப்புரவு தொழிலாளர்கள் வருவதில்லை.
சாக்கடை கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பாதாள சாக்கடை திட்டம் இருந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பேவர் பிளாக் அமைத்து தர வேண்டும். மழைக்காலத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாது.
மேலவாசல் தர்மலிங்கம்: நீண்ட காலமாக சமுதாயக் கூட வசதி கேட்டு வருகிறோம். வீட்டு விேஷங்களை நடத்த இடமின்றி தவிக்கிறோம். தெரு முழுவதும் சாக்கடை தேங்கி நிற்கிறது. அதில் பிளாஸ்டிக் குப்பையை கொட்டுகின்றனர். குடிநீர் குழாய்கள் அமைத்துள்ளனர். அடுக்குமாடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு வந்தால் மாடிப்படி ஏற வேண்டிய அவசியம் இருக்காது. கொசுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. இரவில் துாங்க முடியாத அளவுக்கு சிரமப்படுகிறோம். கொசு மருந்து தெளிக்க வருவதில்லை. கொசுக்களை ஒழித்தால் தொற்று நோய் அபாயம் இருக்காது.
கவுன்சிலர் கார்த்தி: திடீர் நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, பாண்டி பஜார் ரேஷன் கடைகள் திடீர்நகருக்கும், மேலவாசல் பகுதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் புதிதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி காலனி அங்கன்வாடி ரூ. 11 லட்சத்தில் புதிதாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலவாசல் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் கூடுதல் கட்டடம் ரூ. 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் பர்மா காலனி, அலாவுதீன் தோப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படும்.
நேதாஜி ரோட்டில் கழிவு நீர் செல்கிறது. அதனை நவீன முறையில் சரி செய்ய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக விரைவில் புதிய பைப் லைன் அமைக்கப்படும். திடீர்நகருக்கு இருவழிப்பாதை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.