ADDED : ஜூன் 21, 2025 03:42 AM
மதுரை: மதுரை திருவாதவூரில் அறிவகம் அமைப்பு சார்பில் 14 வகை பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் கோடை கால பயிற்சி முகாம் நடந்தது.
திருவாதவூர் ராஜமாணிக்கம், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராகப் பணிபுரிந்து, தற்போது அங்கு வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் தனது அறிவகம் அமைப்பின் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு தட்டச்சு, கையெழுத்து, ஓவியம், தையல், எம்பிராய்டரி போன்ற பயிற்சிகளையும், பரதம், கரகம், பறை, ஒயிலாட்டம், கோலாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற பாரம்பரியக் கலைகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்.
இதன்மூலம் அழிந்து வரும் கலைகளைப் பாதுகாப்பதுடன், கலை வழியே மாணவர்களின் அறிவுத் திறனும், படைப்புத் திறனும் மேம்படுத்தப்படுகிறது. இந்தாண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பயற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.