ADDED : ஜூன் 14, 2025 05:30 AM
மதுரை: 'முதல்போக பாசனத்திற்காக நாளை (ஜூன் 15) வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்படும்' என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 60 அடி நிரம்பியுள்ளது. இந்த அணையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அணையில் இருந்து பெரியார் பிரதான கால்வாய் பாசன பகுதியில் ஜூன் 15 முதல் அக்.12 வரை தண்ணீர் திறந்துவிடப்படும்' என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, வாடிப்பட்டி வட்டங்களில்45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையின் தண்ணீர் இருப்பு, வரத்தை பொறுத்து வினாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்கள் முழுமையாகவும், 75 நாட்கள் முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால் கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.