/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மண்டல அளவிலான தரவுகள் சேகரிப்பு பயிற்சி
/
மதுரையில் மண்டல அளவிலான தரவுகள் சேகரிப்பு பயிற்சி
ADDED : ஜூன் 26, 2025 01:21 AM

மதுரை: மதுரையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் கள செயல்பாட்டு பிரிவு சார்பில் சமூக பொருளாதார தரவுகளை சேகரிக்கும் பொருட்டு மண்டல பயிற்சி முகாம் உதவி இயக்குநர் பழனியப்பன் தலைமையில் நடந்தது.
1950ல் துவங்கப்பட்ட தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.,) மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதன் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (என்.எஸ்.எஸ்.,) 80வது சுற்றின் ஒரு பகுதியாக, வீடுகளிலிருந்து சமூக பொருளாதார தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்தாண்டு ஜூலை முதல் 2026 ஜூன் வரை என்.எஸ்.ஓ., சார்பில், உள்நாட்டு சுற்றுலா செலவின கணக்கெடுப்பு (டி.டி.இ.எஸ்.,), தேசிய வீட்டு பயணக் கணக்கெடுப்பு (என்.எச்.டி.எஸ்.,) ஆகிய இரு புதிய நாடு தழுவிய கணக்கெடுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இ - சிக்மா மென்பொருளுடன் கூடிய கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தி தரவு சேகரிப்புப் பணியில் தகுதியுடைய, நன்கு பயிற்சி பெற்ற கணக்காளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதற்கான பயிற்சி முகாம் 3 நாட்கள் நடக்கின்றன. மதுரை மண்டலம், தஞ்சை, விருதுநகர், திருநெல்வேலி துணை மண்டலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இளநிலை புள்ளியியல் அதிகாரிகளுக்கு முதுநிலை புள்ளியியல் அதிகாரிகள் கண்காணிப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதுரை மண்டல புள்ளியியல் அலுவலக இயக்குநர் விஷ்ணுராஜ் பேசுகையில், ''டி.டி.இ.எஸ்., கணக்கெடுப்பில், இரவில் தங்கும் வகையில் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் சுற்றுப் பயணங்கள், செலவுகள், அதன் தொடர்புடைய தகவல்கள், ஒரே நாள் பயணம் பற்றிய தகவல்கள் சேகரிப்படுகின்றன.
என்.எச்.டி.எஸ்., கணக்கெடுப்பில், நாட்டிற்குள் மக்கள் எங்கு, ஏன், எப்போது ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர் உள்ளிட்ட தரவுகளை ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறுவதாகும்.
அதனடிப்படையில் பொதுப் போக்குவரத்து அமைப்பு, உள்கட்டமைப்புகளை திட்டமிடல், நாட்டின் கொள்கை முடிவுகள், வளர்ச்சிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்'' என்றார்.
விருதுநகர் துணை மண்டல உதவி இயக்குநர் ரத்தினம், உசிலம்பட்டி கோட்ட பொருளாதார, புள்ளியியல் இயக்குனரக உதவி இயக்குநர் மாடசாமி ஆகியோர் பேசினர்.
முதுநிலை புள்ளியியல் அதிகாரிகள் பத்மாவதி, ரூப்சிங் குஜார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மண்டலம், துணை மண்டல அலுவலகங்களின் உதவி இயக்குநர்கள், பொறுப்பு அதிகாரிகள், புள்ளிவிவர அதிகாரிகள், கணக்கெடுப்பு கணக்கீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.