/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
/
'செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
'செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
'செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
ADDED : ஜூன் 19, 2024 02:24 AM
நாமக்கல், ''செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் சாக்கடை மற்றும் கசடு கழிவுநீர் தொட்டிகள் மேலாண் தொடர்பான அபாயகரமானவற்றை நீக்குவதை கண்காணிப்பது குறித்த, மாவட்ட துப்புரவு ஆணைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: கசடு மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கசடு, கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய பயிற்சி பெற்ற பணியாளர்களையே ஈடுபடுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. இயந்திரங்கள் மூலமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வேண்டும்.
மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டப்படி மனிதர்களை கொண்டு கைகளால் கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை முதல் முறையாக மீறுபவர்களுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி, அதன் காரணமாக அப்பணியாளர்கள் இறக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆறு, குளம், கழிவுநீர் வடிகால், திறந்தவெளி, பாதாள சாக்கடை தொட்டி ஆகியவற்றில் கழிவு நீர் கொட்டக்கூடாது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவு நீரை கொட்ட வேண்டும். பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் செப்டிக் டேங் சுத்தம் செய்ய பொது மக்கள், '14420' என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.