/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடைக்கால பட்ஜெட் பிரதமரின் வீடு திட்டத்திற்கு கூடுதல் நிதியால் ஏழை மக்கள் பயன்
/
இடைக்கால பட்ஜெட் பிரதமரின் வீடு திட்டத்திற்கு கூடுதல் நிதியால் ஏழை மக்கள் பயன்
இடைக்கால பட்ஜெட் பிரதமரின் வீடு திட்டத்திற்கு கூடுதல் நிதியால் ஏழை மக்கள் பயன்
இடைக்கால பட்ஜெட் பிரதமரின் வீடு திட்டத்திற்கு கூடுதல் நிதியால் ஏழை மக்கள் பயன்
ADDED : பிப் 02, 2024 10:56 AM
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்தார். இதுகுறித்து பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம் வருமாறு:
வி.டி.கருணாநிதி, உறுப்பினர், எக்ஸ்போர்ட் புரமோசன் கவுன்சில்: தொழில் துறைக்கும், விவசாயத்துக்கும் ஏற்ற பட்ஜெட்டாக உள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம், 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர். தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்க, ஒரு லட்சம் கோடி ரூபாயில் நிதியம் தொடங்கப்படும் போன்ற அறிவிப்புகள், மகிழ்ச்சியளிக்கிறது. தொழில் துறை, விவசாயம், மகளிர் என அனைத்து தரப்புக்கும் ஏற்ற பட்ஜெட்டாக உள்ளது.
ரா.பிரணவகுமார், கல்வியாளர், சுற்றுலா மற்றும் கலாசார ஆர்வலர்: -14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவர். 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும், 1,000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும். 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். இதனால் மக்களின் பயணம் எளிதாகும்.
எஸ்.அமர்நாத், நிலம், நீர் பாதுகாப்பு இயற்கை வேளாண்மை அமைப்பு: லட்சத்தீவை சுற்றுலா மையமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் வரவேற்கதக்கது. அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை தடுக்கும் கட்டமைப்புகளை உருவாக்க, தனியார் மற்றும் அரசு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்பது ஆறுதல் அளிக்கிறது. எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் விதைகள் பயிரிடுவதற்கு மானியம் வழங்க உள்ளதாக கூறியிருப்பது மகிழ்ச்சி. சூரிய மின் சக்தியை அதிகரிக்க வீடுகளுக்கு, 300 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்திருப்பது பலன் தரும்.
ஆர்.காந்தி, லாரி அசோசியேஷன் சட்ட ஆலோசகர்: மாநில அரசுகளுக்கு, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதால், அனைத்து மாநிலங்களும் பலன் பெறும். விவசாயிகள். ஏழை, நடுத்தர மக்கள், தொழில் அதிபர்களுக்கு உகந்த பட்ஜெட்டாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும். நாடு முழுவதும் மருத்துவ கல்லுாரி அதிகரிப்பதும், இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் பாராட்டத்தக்கது. ஊராட்சி, வார்டு வாரியாக நுாலகம் உருவாக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும். அந்த நுாலகங்களை தேசிய டிஜிட்டல் நுாலகத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகள் செய்யப்படும் போன்ற திட்டங்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தும்.
எம்.பழனிவேல், கைலாசநாதர் ஆன்மிக குழு: நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என அறிவித்திருப்பது, மாற்று எரிபொருள் வாகனத்திற்கு மக்கள் அதிகம் செல்ல வாய்ப்புள்ளது. ஆன்மிக சுற்றுலா மேம்படுத்த நிதி ஒதுக்கியிருப்பது ஆன்மிகவாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான நிதி, 66 சதவீதம் அதிகரித்து, 79,000 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதால் ஏழை மக்கள் பயன்பெறுவர்.
கே.சிங்காரம், விசைத்தறி உற்பத்தியாளர் சங்க முன்னாள் பொருளாளர்: மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கையில், புதிய கடனுக்கு, 312 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதும்; 5 ஆண்டுகளில், 2 கோடி வீடுகள் கிராமங்களில் கட்டப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பை பெற்றுள்ளது.

