sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 11, 2024 11:57 AM

Google News

ADDED : ஜன 11, 2024 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுமன் ஜெயந்தி விழா

சிறப்பு யாக வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி, குமாரபாளையத்தில் சிறப்பு யாக வழிபாடு நடந்தது.

குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஷ்வரர் கோவிலில், சவுந்தரராஜ பெருமாள் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, இக்கோவில்களில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. திருவள்ளுவர் நகர், வாசுகி நகர், நடராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில்

பங்கேற்றனர்.

இன்று பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடக்கிறது. இதேபோல் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள பெரிய அளவிலான ஆஞ்சநேயருக்கும், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து

வருகின்றனர்.

காளிசெட்டிபட்டி புதுாரில்

புதிய சாலை அமைப்புஎருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை பஞ்., காளிசெட்டிபட்டி புதுாரில் இருந்து வளையப்பட்டி செல்லும் குறுக்கு சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் புதிய சாலை அமைக்கும் பணிக்காக கடந்த, 4 மாதங்களுக்கு முன் வெட்டி, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. அதன்பின் பணிகள் நடக்காமல் அப்படியே விடப்பட்டன.

இதனால், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக, கடந்த, 29ல் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று காளிசெட்டிபட்டி புதுாரில், 4 மாதங்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சாலையில், தார் ஊற்றி புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மோகனுார் பெருமாள் கோவிலில்

அனுமன் ஜெயந்தி கோலாகலம்

மோகனுார் காவிரி கரையோரத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி பத்மாவதி சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும், அனுமன் ஜெயந்தி உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, கடந்த, 4 முதல், நேற்று முன்தினம் வரை, செந்துாரகாப்பு, புஷ்பங்கி, வெண்ணெய் காப்பு, காய்கறி கனி, சர்வாபரணம், சந்தனகாப்பு ஆகிய அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, நேற்று அனுமன் ஜெயந்தி உற்சவ விழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு, அபிஷேக, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு, சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மாட்டை காப்பாற்ற முயன்ற

வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி

மாட்டை காப்பாற்ற முயன்ற வாலிபர், கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். பள்ளிப்பாளையம், சுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 19; கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், கிணற்றின் ஓரமாக மேய்ந்து கொண்டிருந்த மாடு, சறுக்கி விழ முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, அவர் ஓடிச்சென்று மாட்டை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து மூழ்கினார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வெப்படை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்த ஆறுமுகத்தை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது தந்தை அர்த்தனாரி கொடுத்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசைத்தறி தொழிலாளி

கார் மோதி உயிரிழப்பு

பள்ளிப்பாளையத்தில் கார் மோதிய விபத்தில், விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தார்.

பள்ளிப்பாளையம் அடுத்த காடச்சநல்லுாரை சேர்ந்தவர் செங்கோடன், 53; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், ஐந்துபனை தனியார் பள்ளி அருகே உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றார். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட செங்கோடன், பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே செங்கோடன் உயிரிழந்தார். இதுகுறித்து, செங்கோடன் மகன் ரமேஷ் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாட்டு துப்பாக்கியுடன்சுற்றிய வாலிபர் கைது

புதுச்சத்திரம் அடுத்த குருசாமிபாளையம் பாவடி அருகே, இன்ஸ்பெக்டர் கோமதி, எஸ்.எஸ்.ஐ., திருப்பதி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலம் மாவட்டம், குகை பகுதியை சேர்ந்த கார்த்திக், 38, என்பவர், நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து விலைக்கு வாங்கியதாகவும், உரிமம் இல்லாத துப்பாக்கியை வீட்டில் மறைத்து வைத்து மலைப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததால், புதுச்சத்திரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

பஞ்., தலைவர்களுடன்ஆலோசனை கூட்டம்

எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டியில் அனைத்து பஞ்., தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. பஞ்., தலைவர் துளசிராமன் தலைமை வகித்தார். அலங்காநத்தம் தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழக அர‍சு கொண்டு வந்துள்ள, 104, 106 சட்ட திருத்தத்தில், பஞ்., செயலாளர்கள் ஊராட்சியின் கீழ் இருந்து விடுவித்ததை திரும்ப பெறவும், எருமப்பட்டி யூனியனில் நடக்கு கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை ஊராக வளர்ச்சித்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.2.75 லட்சத்திற்கு

பருத்தி வர்த்தகம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

மொத்தம், 120 மூட்டை பருத்தி வரத்தானது. இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,360 ரூபாய் முதல், 7,300 ரூபாய், டி.சி.எச்., 8,110 ரூபாய் முதல், 9,810 ரூபாய், கொட்டு பருத்தி, 3,360 ரூபாய் முதல், 4,860 ரூபாய் என, மொத்தம், 2.75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்த ஏலம் வரும், 18ல் நடக்கிறது என, மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

மின் நிறுத்தம் வாபஸ்

பரமத்தி வேலுார் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்ட அறிக்கை:

வாழவந்தி துணைமின் நிலைய பகுதிகளுக்குட்பட்ட மோகனுார், மோகனுார் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்னகரசப்பாளையம், நொச்சிபட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிப்பாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி பகுதிகளில் இன்று (ஜன.,11) மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக, மின் நிறுத்தம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால், இன்று மின் நிறுத்தம் செய்யப்படவில்லை. வழக்கம்போல் மின்சாரம் வினியோகம் செய்யப்படும். இவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்சந்தையில்...

இதேபோல், புதன்சந்தை துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணிக்காக, இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அரசு கல்லுாரியில்

போட்டி தேர்வுக்கு விழிப்புணர்வு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை

வகித்தார்.

நாமக்கல் தனியார் மைய போட்டித்தேர்வு மேலாளர் அன்பரசன், நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர், வங்கி தேர்வு, ரயில்வே தேர்வு மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு மற்றும் சீருடை வாரிய தேர்வுகளுக்கு எவ்வாறு ஆயத்தமாக வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தனர்.

தொடர்ந்து, பொது அறிவு வினாக்களுக்கு விடை அளித்தவர்களுக்கு, போட்டி தேர்வுகளுக்கான விளக்க உரை புத்தகம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு வழிகாட்டி மைய அலுவலர் வெஸ்லி

செய்திருந்தார்.

வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

பள்ளிப்பாளையம் அடுத்த சமயசங்கிலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆற்று தண்ணீர், நிலத்தடி நீரை பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் சாகுபடி பணி நடைபெறும். இங்கு கரும்பு சாகுபடி அதிகளவு நடக்கும். தற்போது, வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் கூறியதாவது:

சமயசங்கிலி சுற்றுவட்டாரத்தில் கதலி ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, 10 மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருவதால், வாழை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையால், வாழை கன்றுகள் நன்கு வளர்ச்சியடைந்

துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us