ADDED : ஜூன் 26, 2025 01:40 AM
ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், காக்காவேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55. இவரது மனைவி சாந்தி, 45. இவர்களது மகள் சக்தி, 22. ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.இ., 3ம் ஆண்டு படித்தார். இவர்கள் நேற்று காலை, 'அக்சஸ்' மொபட்டில், ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின், மாலை வீட்டுக்கு புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் ராஜேந்திரன் ஓட்டினார்.
மாலை, 6:20 மணிக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, பால் டேங்கர் லாரி, மொபட் பின்புறம் மோதியது. இதில் மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த சக்தி தடுமாறி விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மகள் இறந்ததை பார்த்து, பெற்றோர் கதறி அழுதனர். மேலும் காயம் அடைந்த தம்பதியர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.