/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரத்தை வெட்ட மண் தோண்டியதாக புகார்
/
மரத்தை வெட்ட மண் தோண்டியதாக புகார்
ADDED : ஜூலை 31, 2024 01:53 AM
குன்னுார்;குன்னுார் மலை ரயில் நிலையத்தில் பழமையான மரத்தை பாதுகாக்க கோரி தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
குன்னுார் ரயில் நிலையத்தில், 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் பார்க்கிங் வசதிகளுடன் மறு வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
அந்த பணியின் போது, 'அங்குள்ள பழமையான மரத்தை வெட்டக்கூடாது' என, ஏற்கனவே மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நடராஜன் ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் செயலாளர் வினோத் குமார்; கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
வினோத்குமார் கூறுகையில், ''ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலை ரயில் பாதையில் ரயிலின் புகையை கட்டுப்படுத்தவே நுாற்றுக்கணக்கான மரங்கள் நடவு செய்யப்பட்டன.
தற்போது ரயில் நிலையத்திலும் அரிய வகை, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் நல்ல நிலையில் உள்ளன.
அதில், ஒரு குறிப்பிட்ட பழமையான மரத்தை வெட்ட வேண்டும் என்பதற்காகவே சுற்றிலும் மண் தோண்டப்பட்டது. தொடர்ந்து, வருவாய் துறையிடம் மரத்தை வெட்டுவதற்கு அனுமதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் அனுமதியும் பெற்றுவிட்டனர்.
இதனை வெட்ட கூடாது; உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்,'' என்றார்.