/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆறுகளை இணைப்பதன் மூலம் மழைநீரை சேமிக்கலாம்
/
ஆறுகளை இணைப்பதன் மூலம் மழைநீரை சேமிக்கலாம்
ADDED : ஜூலை 29, 2024 11:42 PM

கூடலுார்;கூடலுார் பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியாறு--புன்னம்புழா, மாயார் ஆறுகளை இணைத்தால் மழைநீர் வீணாவதை தவிர்க்கலாம்.
கூடலுார் பகுதி தமிழகத்தின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகும். இங்கு உற்பத்தியாகும் பாண்டியாறு-புன்னம்புழா ஆறு, கேரளா மாநிலம் சாலியார் ஆற்றிலும்; மாயார் ஆறு பவானி ஆற்றிலும் கலக்கின்றன.
இதில், பாண்டியாறு- புன்னம்புழா ஆற்றின் முக்கிய கிளை ஆறுகள், கூடலுார், ஓவேலி தேவாலா, புளியம்பாறை பகுதிகளில் உற்பத்தியாகின்றன. ஆண்டுதோறும் கேரளாவிலும், கூடலுாரிலும் ஒரே நேரத்தில் பருவமழை துவங்கி பெய்வது வழக்கம். அப்போது, பாண்டியாறு- புன்னம்புழா ஆற்றில் ஏற்படும் மழை வெள்ளம், கேரளா சாலியார் ஆற்றில் கலந்து அரபி கடலுக்குள் சென்று வீணாகிறது.
கூடலுாரில் மழை நீரை சேமிக்கும் திட்டம் செயல்படுத்தி இருந்தால் பருவமழை காலத்தில், மழைநீர் சேமித்து பயன்படுத்திருக்கலாம். ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நடப்பாண்டு கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வழக்கத்தைவிட பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. மழைநீரை சேமிக்க வசதி இல்லாததால், பாண்டியார் - புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம், பயனின்றி,கேரளா சாலியார் ஆற்றில் கலந்து, அரபி கடலுக்குள் சென்று வீணாகி வருகிறது.
இவ்வாறு, வீணாகும் மழை நீரை சேமிக்க, பாண்டியார்-புன்னம்புழா ஆற்றை பவானியின் கிளை நதியான மாயார் ஆற்றில் இணைக்க, அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,'கூடலுாரிலும், கேரளாவிலும் ஜூன் மாதம் துவங்கி நவ., வரை பருவ மழை பெய்யும். அப்போது கேரளாவிலும் தண்ணீர் தேவை இருக்காது என்பதால், கேரளா சாலியார் ஆற்றில் கலக்கும் பாண்டியாறு-புன்னப்புழா ஆற்றின் மழை வெள்ளம், அரபி கடலில் கலந்து வீணாகிறது.
இங்குள்ள மாயாறுடன், பாண்டியாறு - புன்னப்புழா ஆற்றினை இணைப்பதன் மூலம், வீணாகும் நீரை, தமிழகத்துக்கு திருப்பி விட்டு சேமித்து, பயன்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்,' என்றனர்.