/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி ஏரியை துார் வார திட்டம் வல்லுனர் குழுவினர் ஆய்வு
/
ஊட்டி ஏரியை துார் வார திட்டம் வல்லுனர் குழுவினர் ஆய்வு
ஊட்டி ஏரியை துார் வார திட்டம் வல்லுனர் குழுவினர் ஆய்வு
ஊட்டி ஏரியை துார் வார திட்டம் வல்லுனர் குழுவினர் ஆய்வு
ADDED : ஜூலை 10, 2024 11:57 PM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி ஏரி, ஜான் சல்லீவன் என்பவரால், 1824ல் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியாகும். ஏரி முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. பின், ஏரி முழுவதும் படகு பயணம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இந்த ஏரி, 1973ம் ஆண்டில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு, படகு சவாரி நடந்து வருகிறது.
நகரில் வெளியேறும் கழிவுநீர் ஏரியின் கரையில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட பின், ஏரியில் கலக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் சுற்றுலா பயணியர் ஏரியில் படகு சவாரி செய்கின்றனர். இந்த ஏரி இதுவரை முழுமையாக துார் வாரப்படாததால், 25 அடி ஆழத்தில், 10 அடி வரை வண்டல் மண் சேர்ந்துள்ளது. இதை சுத்திகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி ஏரியை அணு சக்தி விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, நீர் வளத்துறை செயற்பொறியாளர் அருளழகன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று காலை மோட்டார் படகில் சென்று ஆய்வு செய்தனர்.
அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா நிருபர்களிடம் கூறுகையில், ''ஊட்டி ஏரி தண்ணீரில் கலந்துள்ள மாசு குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிசோதனை செய்ய உள்ளனர். இங்கு ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு மையத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து ஆய்வு செய்யப்படும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முழு ஆய்வறிக்கைக்கு பின் தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நீர் வளத்துறை செயற் பொறியாளர் அருளழகன் கூறுகையில்,''ஊட்டி ஏரியை முழுமையாக துார்வார, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில், 2.98 லட்சம் கன மீட்டர் மண் உள்ளது. முதற்கட்டமாக, 1.11 லட்சம் கன மீட்டர் மண் அகற்ற திட்டமிட்டுள்ளோம்.
''டிரேடஜிங் இயந்திரம் பொருத்தப்பட்ட துார்வாரும் படகில், நவீன தொழில்நுட்ப முறையில் இப்பணிகள் செயல்படுத்தப்படும். ஏரியில் இருந்து எடுக்கப்படும் மண் மாசு கலந்து இருக்கும் என்பதால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது.
''நகராட்சிக்கு சொந்தமான தீட்டக்கல் குப்பை மேலாண்மை தளத்தில் கொட்டப்படும். ஓரிரு நாளில் டெண்டர் பணி முடிந்தவுடன் விரைவில் பணி துவக்கப்படும்,'' என்றார்.