/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாரம்பரிய கட்டடம் உரகிடங்காக மாறிய அவலம்
/
பாரம்பரிய கட்டடம் உரகிடங்காக மாறிய அவலம்
ADDED : ஜன 09, 2024 08:55 PM
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் உள்ள பாரம்பரிய கட்டடம், உர கிடங்காக மாற்றப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோடை வாசஸ்தலமான நீலகிரியில், ஊட்டி தாவரவியல் பூங்கா, சிறந்த சுற்றுலா மையமாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், பூங்காவின் அழகை கண்டு களித்து செல்கின்றனர்.
பூங்காவின் முகப்பு பகுதியில் இருபுறங்களிலும், 1859ல் நுழைவு வாயில் கட்டடம் கட்டப்பட்டு, அரிய வகை பல்வேறு தாவர இனங்கள் பாதுக்காக்கப்பட்டு வந்தது. 1912ம் ஆண்டு முதல், அழகு செடிகள் மற்றும் பூ விதைகளை விற்கும் விற்பனை கூடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
நூற்றாண்டு மலர் கண்காட்சி விழாவை முன்னிட்டு, 1995ல் இக்கட்டடம் கலை நயத்துடன் விளங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பூங்கா நிர்வாகம், புகழ்வாய்ந்த இக்கட்டடத்தை தற்போது உர கிடங்காக மாற்றியுள்ளது.
இதனால், பூங்காவிற்குள் நுழையும் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'பூங்கா நிர்வாகம், உர கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதுடன், கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து, கடந்த காலங்களில் இருந்தது போல மலர் செடிகள் மற்றும் பூ விதைகள் விற்கும் கூடமாக மாற்ற வேண்டும்,' என்றனர்.

