/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் 'ஏஐ' கேமராக்கள்! துாய்மை பணியை நவீன முறையில் மேம்படுத்த திட்டம்
/
ஊட்டி நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் 'ஏஐ' கேமராக்கள்! துாய்மை பணியை நவீன முறையில் மேம்படுத்த திட்டம்
ஊட்டி நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் 'ஏஐ' கேமராக்கள்! துாய்மை பணியை நவீன முறையில் மேம்படுத்த திட்டம்
ஊட்டி நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் 'ஏஐ' கேமராக்கள்! துாய்மை பணியை நவீன முறையில் மேம்படுத்த திட்டம்
ADDED : ஜூன் 05, 2025 11:56 PM

ஊட்டி; ஊட்டி நகரில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ)அடிப்படையில் நகரத்திலுள்ள முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பொதுமக்கள் குப்பையை வீசி செல்லும் நிலைகளை பகுப்பாய்வு செய்து, துாய்மை பணியை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு சேகரிக்கப்படும் மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு திடக்கழிவு மேலாண்மை வாயிலாக உரமாக்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான இங்கு ஆண்டிற்கு, 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இப்பகுதியின் துாய்மை பணிகளை மேம்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மையில் நவீன மாற்றத்தை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
இந்த திட்டத்தின் கீழ், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் மலை மாவட்டத்தில் மாசுபாட்டு சவால்களுக்கு நீண்டகால தீர்வை தரும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
முக்கிய செயல்பாடாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் நகரத்திலுள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த தொழில்நுட்பம் பொதுமக்கள் குப்பையை வீசி செல்லும் நிலைகளை பகுப்பாய்வு செய்து, திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவும்.
வீடு தோறும் விழிப்புணர்வு பிரசாரம்
மேலும், ஊட்டி நகராட்சி சார்பில் இத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடு, வீடாக டிஜிட்டல் பிரசாரம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும்.
துாய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவு சேகரிப்பு உத்திகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படும். அவர்களது பாதுகாப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்படும்.
நகரத்திலுள்ள, 1,500 வர்த்தக இடங்களில் உலர் கழிவுகளுக்கான வலைப்பைகளும், 'பிளாஸ்டிக்' போன்ற கழிவுகளை நசுக்கும் இயந்திரங்கள் அமைக்கப்படும்.
36 வார்டுகளிலும், 14 பொது கழிவறைகளிலும் சானிடரி நாப்கின் எரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது. சேவைகள் திறம்பட இருக்க, குப்பை சேகரிப்பு வாகனங்களில் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் முழுமை பெற்றால், அடுத்த சீசனுக்குள் 'துாய்மை ஊட்டி' நிச்சயம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில்,''இத்திட்டம் நகராட்சிக்கு உட்பட்ட காந்தள் உட்பட, 13 வார்டுகளில் தனியார் பங்களிப்புடன் துவக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் துாய்மையான நகர சூழலை உருவாக்க உள்ளோம்,'' என்றார்.