/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஊழியர்கள் 2ம் நாள் வேலை நிறுத்தம்
/
பஸ் ஊழியர்கள் 2ம் நாள் வேலை நிறுத்தம்
ADDED : ஜன 10, 2024 11:50 PM
அன்னூர் : கோவை புறநகரில் பஸ் ஊழியர்கள் 2 ம் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. தற்காலிக டிரைவர்கள் இயக்கிய பஸ்களில் மக்கள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தை துவக்கினர்.
அன்னூர் கிளையில் மொத்தமுள்ள 240 தொழிலாளர்களில், நேற்று 65 பேர் பணிக்கு வரவில்லை.
இதை சமாளிக்க போக்குவரத்துக் கழக நிர்வாகம் நேற்று முன்தினம் 10 பேர், நேற்று ஆட்டோ டிரைவர்கள் உட்பட 10 பேர் என 20 பேரை தற்காலிகமாக நியமித்தது. மொத்தம் 20 பேர் நேற்று அன்னூர் கிளையைச் சேர்ந்த பஸ்களை இயக்கினர்.
நேற்று முன்தினம் வரை ஆட்டோ ஓட்டிய டிரைவர்கள் திடீரென பஸ் ஓட்டுவதற்கு வந்ததை பார்த்து பயணிகள் அச்சமடைந்தனர். அச்சத்துடனே பயணம் செய்தனர். எனினும் அன்னூர் பகுதியில் எந்த விபரீதமும் நடைபெறவில்லை.
அன்னூர் கிளையில் உள்ள 51 பஸ்களும் இரண்டாவது நாளாக நேற்றும் வழக்கம்போல் இயங்கின.
சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டாவது நாளாக அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன.
தி.மு.க., ஆதரவு தொழிற்சங்கத்தினர் மட்டும் பணியில் ஈடுபட்டனர். சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி டிப்போவில் மொத்தம் உள்ள, 86 பஸ்களும் இரு நாட்களாக இயக்கப்பட்டன. காலை முதல் மதியம் வரை அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
ஆனால், மதியத்துக்கு மேல் பஸ் ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பஸ்கள் குறைந்த அளவே ஓடும் என்பதால், நேற்று பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தளவே இருந்தது. பஸ் ஸ்டாண்ட் மற்றும் டிப்போக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகம் கிளை அலுவலகம் ஒன்றில், 31 டவுன் பஸ்கள், 30 மப்சல் பஸ்கள் என மொத்தம் 61 பஸ்கள், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கிளை அலுவலகம் இரண்டில், 58 பஸ்கள், ஊட்டி, தஞ்சாவூர், மதுரை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் நாள் வேலை நிறுத்த போராட்டமான நேற்று 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. விடுமுறை எடுக்கப்பட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு பதிலாக 40 தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் 8 நடத்துனர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர், என்பது குறிப்பிடத்தக்கது.
--பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் நேற்று முன்தினம் போலவே நேற்றும் பஸ் போக்குவரத்து இயல்பான நிலையில் இருந்தது. தனியார் பஸ்களில், பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட, அதிகமாக இருந்தது.
ஆர்ப்பாட்டம்
அன்னூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போக்குவரத்து கழகங்களை, தனியார் மயமாக்கக்கூடாது. 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய 8 ஆயிரம் பேரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். என வலியுறுத்தி, அன்னூர் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யு., ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தலின் போது வாக்குறுதி அளித்த தமிழக முதல்வரே வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுங்கள் என்று கோஷங்கள் எழுப்பினர்.
ஊழியர்கள் மறியலில் ஈடுபடலாம் என தகவல் வெளியானதை அடுத்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

