ADDED : பிப் 05, 2024 11:12 PM

அன்னுார்:ஜல்லி பரப்பி, ஐந்து மாதங்களாகியும் பணி நடக்காததால், அங்கன்வாடி குழந்தைகள் அவதிப்படுகின்றன.
கரியாம்பாளையத்தில், மாரியம்மன் கோவில் அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள, 25 குழந்தைகள் கல்வி கற்கின்றன. பிரதான சாலையில் இருந்து அங்கன்வாடி மையம் வரை, 100 அடி துாரத்துக்கு, 10 அடி அகலத்துக்கு, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ஐந்து மாதங்களுக்கு முன் துவங்கியது. ஜல்லி கற்கள் பரப்பி சமன்படுத்தப்பட்டது. அதன் பின், அடுத்த கட்ட பணி இதுவரை நடைபெறவில்லை.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'குழந்தைகள், காலில் குத்தும் கற்களுடன் உள்ள ஜல்லி பரப்பிய தரை மீது சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். ஐந்து மாதம் ஆகியும் இப்பணியை முடிக்கவில்லை. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.