/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டகை எரிந்து மாடுகள் பலி போலீசார் தீவிர விசாரணை
/
கொட்டகை எரிந்து மாடுகள் பலி போலீசார் தீவிர விசாரணை
கொட்டகை எரிந்து மாடுகள் பலி போலீசார் தீவிர விசாரணை
கொட்டகை எரிந்து மாடுகள் பலி போலீசார் தீவிர விசாரணை
UPDATED : ஜூன் 07, 2025 05:53 AM
ADDED : ஜூன் 06, 2025 10:16 PM
ஊட்டி; மஞ்சூர் அருகே, 6 மாடுகள் தீ விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சூர் குந்தாபாலம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து பால் வினியோகம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, வீட்டின் அருகில் உள்ள தகரத்தால் ஆன கொட்டகையில், 6 பசு மாடுகளை கயிற்றில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவில் மாட்டு கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாடுகள் கயிறு கொண்டு கட்டப்பட்டதால் வெளியில் வர முடியவில்லை. மாடுகளின் சப்தம் கேட்டு அங்கு வந்த தேவராஜ், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார்.
தீயை அணைக்க முடியவில்லை. போராடி அணைக்க முயற்சி செய்த போது, தேவராஜ் உட்பட ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், 6 பசுமாடுகள் இறந்து பலியானது. பசுமாடுகள் தீயில் கருகி கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் சோகமடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில், 'மாட்டு கொட்டகை இருந்த இடத்துக்கும், வீட்டிற்கும், 50 அடி தொலைவு மட்டுமே உள்ளது. மாட்டு கொட்டகைக்கு மின் இணைப்பு கிடையாது. எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா என்பது உட்பட விசாரணை நடத்தி வருகிறோம்,' என்றனர்.
குந்தா தாசில்தார் சுமதி கூறுகையில், ''வழக்கமாக பேரிடரில் மாடுகள் இழந்தால் தான் நிவாரணம் வழங்கப்படும். ஒரே சமயத்தில், 6 மாடுகள் இறந்து இருப்பதால், அவருடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், போலீஸ் அறிக்கை பெறப்படும்.
மேலும், மாடுகளின் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகம் வாயிலாக அரசுக்கு அனுப்பி நிவாரணம் பெற்று தர முயற்சி செய்கிறோம்,'' என்றார்.