ADDED : பிப் 29, 2024 11:57 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில், வெள்ளிப்பாளையம் பகுதி உள்ளது. இதனருகில் உள்ள சென்னாமலை கரடு பகுதியில், இரு நாட்களுக்கு முன், வீட்டுக்கு முன் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி, வனவிலங்கு தாக்கி இறந்தது.
சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வன ஊழியர்கள், ஆய்வு செய்தனர். கன்றுக்குட்டி, சிறுத்தை தாக்கி உயிரிழந்தது உறுதியானது. கண்காணிப்பு கேமரா அமைத்து, சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''சிறுத்தையை பிடிக்க பயன்படுத்தப்படும் கூண்டு, வன ஊழியர்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சிறு, சிறு வேலைகள் உள்ளன. முழுவதுமாக தயாரானதும் கூண்டு வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கப்படும். இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வரவேண்டாம். கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டிவைக்க வேண்டும்,'' என்றார்.

