/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம சாலை சீரமைப்பில் மெத்தனம் ;நிதி ஒதுக்கியும் பணிகள் நடக்காததால் அதிருப்தி
/
கிராம சாலை சீரமைப்பில் மெத்தனம் ;நிதி ஒதுக்கியும் பணிகள் நடக்காததால் அதிருப்தி
கிராம சாலை சீரமைப்பில் மெத்தனம் ;நிதி ஒதுக்கியும் பணிகள் நடக்காததால் அதிருப்தி
கிராம சாலை சீரமைப்பில் மெத்தனம் ;நிதி ஒதுக்கியும் பணிகள் நடக்காததால் அதிருப்தி
ADDED : பிப் 05, 2024 09:31 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங் கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, 7-வது வார்டு பகுதியில் பந்தபிலா, தைதல்கடவு குன்றில் கடவு கிராமங்கள் அமைந்துள்ளன. தைதல் கடவு வழியாக குன்றில்கடவு பழங்குடியின கிராமத்திற்கு செல்ல மண் சாலை அமைந்துள்ளது.
பல தலைமுறைகளாக இப்பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில், மழை காலத்தில் மண்சாலை சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், 'மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்,' என, பழங்குடியினர் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் கட்டமாக, 800 மீட்டர் மண் சாலையை 'சோளிங்' சாலையாக மாற்ற, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சாலை சீரமைக்கும் வகையில், ஒரு சில இடங்களில் மட்டும் ஜல்லிகற்கள் போடப்பட்டது. மீதமுள்ள பகுதிகள் மண் சாலையாகவே உள்ள நிலையில், கிராமத்திற்கு வரும் சாலையின் முகப்பில் ஒப்பந்ததாரர், ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளார்.
இதனால், வெயில் காலங்களில் கிராமத்திற்குள் வந்து சென்ற ஆட்டோ பைக், ஜீப் போன்ற வாகனங்கள் கூட தற்போது வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் பகல் நேரங்களிலும் சிறுத்தை, கரடி மற்றும் யானைகள் வந்து செல்லும் நிலையில், பள்ளி செல்லும் மாணவர்களை பெற்றோர், காலை மற்றும் மாலையில், பாதுகாப்பான முறையில் நடந்து கூட்டி வந்து, ஆட்டோ மற்றும் ஸ்கூல் பஸ்களில் ஏற்றி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும், வயோதிகர் மற்றும் கர்ப்பிணிகளை அவசர காலங்களில் துாக்கி வர வேண்டிய அவலமும் தொடர்கிறது. நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும், பணி முழுமையாக மேற்கொள்ளப்படாதது குறித்து, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் பதில் இல்லை.
கிராம மக்கள் சார்பில் விஜயகுமார் என்பவர் கூறுகையில்,''இந்த சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று தெரியாத நிலையில், உரிய விசாரணை மேற்கொண்டு, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை கூறுகையில்,'' இது குறித்து பொறியியல் துறையிடம் கூறி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.